தகவல் | சற்றுமுன்...




புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

August 22nd, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

புத்தகத்துக்கு வேலையில்லை: வீணாகும் பல கோடி

சென்னை, ஆக. 21: தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது புத்தகங்கள் மூலம் பாடம் நடத்தப்படுவதில்லை. இதனால் மாணவர்களுக்காக அச்சிடப்படும் கோடிக்கணக்கான மதிப்பிலான புத்தகங்களுக்கு பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்கால சமுதாயத்தின் ஆணிவேராக அமைவது இன்றைய குழந்தைகளின் தொடக்கக் கல்வியே. இதில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னையும் எதிர்காலத்தில் சமுதாய பிரச்னையாக உருவெடுக்கும். தமிழகத்தில் தற்போதும் மிகப் பழமையான மெக்காலே கல்வித் திட்டத்தின்படியே கல்வி முறை இயங்கி வருகிறது.

இந் நிலையில் தமிழக அரசு கடந்த 2007-2008 கல்வி ஆண்டில் “செயல்வழிக் கற்றல்’ (ஏ.பி.எல்.) என்ற புதிய கற்பித்தல் முறையை ஆரம்பப் பள்ளிகளில் (ஒன்று முதல் 4-ம் வகுப்பு வரை) அறிமுகப்படுத்தியது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080821121210&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&ndate=8/22/2008&dName=No+Title&Dist=


ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

August 19th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஓய்வு காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வருமாறு முஷாரபுக்கு சீக்கியர் அழைப்பு

புதுதில்லி, ஆக.19: ஓய்வு காலத்தை கழிக்க வருமாறு முஷாரபுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலதேவ் சிங். முஷாரப் தனது ஓய்வுக்காலத்தை கழிக்க இந்தியாவுக்கு வர வேண்டும் என பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

முஷாரபுக்கு 350 ஏக்கர் நிலம், நல்ல குதிரைகள், சொகுசுக் கார், ஆடம்பரமான மாளிகை ஆகியவற்றைத் தரவும் அவர் முன்வந்திருக்கிறார்.

முஷாரபும் இந்தியாவில் பிறந்தவர் என்பதால் தாம் இதைத் தர முன்வந்திருப்பதாகக் கூறும் பலதேவ் சிங், பாகிஸ்தானில் முஷாரபுக்கு மதிப்புக் குறைந்திருந்தாலும், இந்தியர்கள் அவர் மீது அன்பு வைத்திருக்கிறார்கள் என்றார்.


நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்

August 17th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்

சென்னை, ஆக. 16: நூலங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 120 கோடியில் உலக தரத்தில் அமைக்கப்பட உள்ள அரசு நூலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி சனிக்கிழமை அவர் பேசியது:-

தங்கம் தென்னரசுவை எதற்காக அமைச்சராக நியமித்தேனோ அது நிறைவேறியுள்ளது. எனது நினைப்பை நுகர்ந்து பார்த்து நிறைவேற்றுகிறார். அதில் ஏமாறவில்லை. நானும் ஏமாற மாட்டேன்.

யார், யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும், யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்து நாங்கள் செயல்படுகிறோம்.

கோட்டூர்புரம் எனது வாழ்க்கையின் முழுமையான அத்தியாயம். ஒரு பொதுத் தேர்தல் நேரத்தின்போது இப்பகுதியில் சிலர் என்னையும், உடன் வந்தவர்களையும் ஒரு மண்டபத்தில் சிறைவைத்து தாக்கினர்.

அவர்களிடம் இருந்து என்னை ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த சாரங்கன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காப்பாற்றினர். அவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை பரிசாக அண்ணா வழங்கினார்.

அவர்கள் என்னைக் காப்பாற்றாவிட்டால், என்னை முதல்வராக நீங்கள் பார்த்திருக்க முடியாது. எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

வீடுகள்தோறும் நூலகம்: வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் அது, எந்த இடத்தில் வாங்கப்பட்டது என்பது குறித்து அதன் சரித்திரத்தைக் கூறுவார்கள். நூலகம் நமது அடிப்படைத் தேவை. வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அவரது ஆவல் இன்னமும் நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றும் வகையில் நாம் நடைபோடுவோம். எனவே, இந் நூலகம் சிறப்பாக அமைக்கப்படும்.

வருங்காலத்தில் இந்த நூலகத்தை பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தினால், இந்த விழா வெற்றி பெற்றதாக அமையும்.

நூலகங்களின் செயல்பாடு சரியில்லை: தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது.

கோட்டூர்புரத்தில் நூலகம் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை நான் பெற்றதற்கு எனது மகள் கனிமொழியே காரணம் என்று குறிப்பிட்டனர். கனிமொழியின் ஆர்வத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.

விரைவில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

இதில் அமைச்சர்கள் க. அன்பழகன், துரைமுருகன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலர் எல்.கே திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

August 13th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஒரு கோடி புத்தகங்களின் சங்கமம்! கோவை புத்தக திருவிழா நாளை துவக்கம்

கோவை, ஆக.12: கோவை மத்திய சிறை மைதானத்தில் ஒரு கோடி புத்தகங்களுடன் “கோவை புத்தகத் திருவிழா’ வியாழக்கிழமை (ஆக.14) தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் 24-ம் தேதி வரை இக் கண்காட்சியை நடத்துகிறது. 176 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. தமிழ் புத்தகம் 136 அரங்கிலும், ஆங்கிலப் புத்தகம் 36 அரங்கிலும், மல்டி மீடியா தொடர்பானவை 6 அரங்கிலும் இடம் பெறும். அனைத்து நாளிலும் காலை 11 முதல் இரவு 9 வரை கண்காட்சி நடைபெறும்.
 
 


`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369

August 12th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அறிவிப்பு, சுற்றுலா, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369
நகர் முழுவதும் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சென்னையின் 369-வது பிறந்த நாள் விழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

4-வது ஆண்டாக

1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை பிறந்தது. இப்போது 369 வயதாகிறது. பாரம்பரியமான இந்த சென்னையைப் பற்றி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக `மெட்ராஸ் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் `மெட்ராஸ் டே’ கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதுபற்றி சென்னையில் `மெட்ராஸ் டே’ நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எஸ்.முத்தையா, வின்சென்ட் டி சவுசா, வி.ஸ்ரீராம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

60 நிகழ்ச்சிகள்

`மெட்ராஸ் டே’ கொண்டாட்டம் கடந்த ஆண்டுகளில் தென்சென்னையில் மட்டும் நடந்தது. இந்த ஆண்டு 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒருவாரத்திற்கு நகர் முழுவதும் குறிப்பாக ராயபுரம், அண்ணாநகர் போன்ற வடசென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 50 அமைப்புகள் மொத்தம் 60 வகையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

பராம்பரியமிக்க சென்னையின் பிறந்த நாள் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம் என்பது போன்ற நாட்கள் மக்கள் மனதில் இருப்பதைப் போல சென்னை பிறந்த நாளும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும்.

அரிய புகைப்படக் கண்காட்சி

பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வழியே நடந்து செல்லுதல், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி பேசுதல், ஆவணப்படம் திரையிடுதல், பராம்பரிய உணவுத் திருவிழா, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அரிய புகைப்படக் கண்காட்சி, அஞ்சல் தலை, நாணயங்கள் கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

சென்னைத் துறைமுகம், சென்னைக் கோவில்கள், சிங்கார சென்னையின் சிறப்பு அம்சம், பழைய சென்னையில் நடந்த ஆளவந்தார் கொலை வழக்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு ஆண்டு அஞ்சலி, சென்னையும் சுதந்திரப் போராட்டமும் போன்ற பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

அண்ணாநகர் பூங்கா

காலையில், மை லேடீஸ் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவற்றில் மரங்களின் நடுவே நடக்கவும், மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலையில் ஊர்வலமாக நடந்து செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

 


செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு

August 9th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், ஊடகம், தகவல், பதிவுலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு

கரூர், ஆக. 9: செய்தி சேகரிக்கச் சென்ற போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கரூர் பத்திரிகையாளர்கள் 18 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதுபற்றிய விவரம்:

கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலையில் ராயல் கோச் என்னும் பஸ் கட்டும் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் பழனிசாமி (55). இந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட பஸ் தீயில் எரிந்து கொண்டிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அந்த நிறுவனத்தின் உள்ளே சென்று புகைப்படம், விடியோ எடுக்க முற்பட்டனர். ஆனால், அனைவரையும் நுழைவாயில் முன் ஆலையின் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும், புகைப்படம் எடுத்தால் கேமராவை உடைத்து விடுவோம் எனத் தொழிலாளர்கள் மிரட்டினர். அப்போது அங்கு வந்த உரிமையாளர் பழனிசாமி, “அனைத்து தொழிலாளர்களும் படிக்காதவர்கள், அவர்கள் நினைத்தால் உங்களை (பத்திரிகையாளர்களை) என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவார்கள். அதனால் நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். ஓடிவிடுங்கள்’ என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.

அவரது பேச்சைக் கேட்ட மற்ற ஊழியர்கள், ஆவேசமடைந்து, அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள் ஆர். ராதாகிருஷ்ணன் (36), செபஸ்டியன் (30), சி. ஆனந்தகுமார் (30), எஸ். சங்கர் (30) ஆகியோரைத் தாக்கினர். மேலும், ஆனந்தகுமாரின் கேமராவை பிடுங்கிக் கொண்டு, கீழே தள்ளினர். தகாத வார்த்தைகளால் பேசிய தொழிலாளர்கள், “பத்திரிகையாளர்கள் இங்கிருந்து செல்லாவிட்டால் கை, காலை வெட்டிவிடுவோம்’ என மிரட்டினர்.

சாலையில் நின்றால்கூட அடிவிழும் எனத் தொடர்ந்து தள்ளியபடி இருந்தனர். மொத்தம் 8 பத்திரிகையாளர்களைச் சுமார் 200 பேர் சுற்றிவளைத்துக் கொண்டனர். பசுபதிபாளையம் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் ஒரு காவலர் அங்கு வந்ததும், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஏ. சிவராமனிடம் பத்திரிகையாளர்கள் சி. ஆனந்தகுமார், ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக ராயல் கோச் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மீது, பத்திரிகையாளர்களைக் கொல்ல முயன்றதாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் இரு பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, ராயல் கோச் நிறுவன மேற்பார்வையாளர் ஆர். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பத்திரிகையாளர்கள் எஸ். ஜெய்சங்கர், செபஸ்டியன், சி. ஆனந்தகுமார் உள்ளிட்ட 18 பத்திரிகையாளர்கள் மீது, 294 (பி) (தகாத வார்த்தைகளால் திட்டுவது), 341 (பணி செய்யவிடாமல் தடுப்பது), 447 (அத்துமீறி உள்ளே நுழைவது), 506 (கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்: செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இல்லாத பத்திரிகையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
 


மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் மனித நீதி பாசறை அறிவிப்பு

August 6th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, அரசியல், அறிவிப்பு, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் மனித நீதி பாசறை அறிவிப்பு

மதுரையில் சுதந்திரதின அணி வகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மனித நீதி பாசறை அறிவித்துள்ளது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப்இந்தியாவின் அகில இந்திய பொதுச் செயலாளர் இ. எம். அப்துர் ரஹ்மான் மதுரையில் நேற்று கூறிய தாவது; ஆகஸ்ட் 15 அன்று மதுரையில் சுதந்திரதின அணிவகுப்பு திட்டமிட்டபடி நடைபெறும். இந்த அணிவகுப்பில் சுமார் 500 பேர் வீரர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். அணிவகுப்பின் முன்பாக தேசிய கொடி ஏந்திச் செல்லப்படும் இந்த அணிவகுப்பு பிற்பகல் சுமார் 3 மணியளவில் மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளி மைதானத்தில் துவங்கி மாட்டுத்தாவணி அருகே உள்ள விறகுப்பேட்டை மருதநாயகம் திடலில் முடிவடையும். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அகில இந்திய தலைவர் ஆ.அஞீபக்கர் இந்த அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொள்வார்கள் அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃரண்ட் கட்சியின் செயல் தலைவர் வழக்கறிஞர் ஹஃபீஸ் ரஷீத் சௌவ்த்தரி இந்த சுதந்திர அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

அணிவகுப்பின் முடிவில் சுதந்திரதினப் பொதுக்கூட்டம் நடைபெறும். அங்கு அணிவகுப்பு வீரர்களும் பொதுமக்களும் சுதந்திர தின உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலை சுமார் 6.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவுறும்.

இந்திய விடுதலைப் போர் என்பது ஓர் வீரகாவியம், இந்தப் போரில் எண்ணற்றோர் சிறை சென்றனர். லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர். அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக சுதந்திர தாகம் கொண்ட இந்திர்களின் தியாகம் சுதந்திரப் போராட்டத்தில் வெளிப்பட்டது.

இந்த சுதந்திர தியாகத்தை நினைவு கூறும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் ஆகஸ்ட் 15_ம் நாள் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தமிகத்தில் மதுரையிலும், கேரளாவில் கொச்சி, வயநாடு ஆகிய இரு இடங்களிலும், கர்நாடகத்தில் மங்களுரிலும் இந்த சுதந்திரதின அணிவகுப்பு நடக்கின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஓர் அங்கமான மனித ஞிதிப் பாசறை மதுரையில் இந்த சுதந்திரதின அணிவகுப்புபை நடத்த ஏற்பாடுகளை முன்னின்று செய்து வருகின்றது.

சுதந்திரத்திற்கு எதிராக இருந்தார்கள் சங்பரிவார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. இன்று சுதந்திர தியாகிகளை கௌரவிக்கும் சுதந்திரதின அணிவகுப்பிற்கும் தடையாக இருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்து கொண்டிருக்கிறது.

சுதந்திர தினத்தை கௌரவிக்கும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில் ஜாதி, மதம் அரசியல், கட்சி ஆகியவற்றை கடந்து இந்த தேசத்தின் குடிமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புடன் அழைக்கின்றோம்.

பேட்டியின போது மனித நீதிப் பாசறையின் மாநில துணைத் தலைவர் மௌலவி ஷேக் முஹம்மது தெஹ்லான் பாகவி எம். என். பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது முபாரக், எம்.என்.பி.யின் மதுரை மாவட்டச் செயலாளர் முஹம்மது நஸ்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

http://www.thinaboomi.com/2008/aug/06/districts/district9.php


சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், சற்றுமுன், தகவல், தகவல், தமிழ்நாடு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் சினிமா: கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு

சென்னை, ஆக. 4 : சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர்க்குமாறு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் சுதந்திர தினத்தை கொச்சைப்படுத்துகிறார்கள். கூத்தும், கும்மாளமும், பேட்டி என்ற பெயரில் நடிகர், நடிகைகள் தங்களின் சுயபுராணத்தைக் கூறுவதும் அருவருப்பாக உள்ளது.

வரும் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரை சுதந்திரத்தின் அருமை, பெருமைகள், தியாகிகளின் வீர வரலாறு, காட்சிகளாக, ஆடல், பாடல்களாக, எழுச்சி உரைகளாக, கதை, கவிதை, பட்டிமன்றங்களாக ஒளிபரப்ப வேண்டும்.

இதைத்தான் மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கிறோம் என, தங்கள் கையெழுத்துடன் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 


தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கம்

August 5th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கம்

சென்னை, ஆக. 4: உச்ச நீதிமன்ற வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தவறிய தமிழக அரசு வழக்கறிஞர்கள் வி.ஜி. பிரகாசம், டி. ஹரிஷ்குமார் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதம் தொடர்பாக தமிழக முதல்வர், மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், காவல் துறைத் தலைவரும் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்காக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியதாகவும் தகவல் அறிந்து அது குறித்து விசாரித்தேன்.

தில்லியில் பணிபுரியும் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு குறித்து உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால்தான் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கு உரிய காலத்தில் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிய வந்தது.

திமுக அரசு எப்போதும் நீதியின் மாட்சிமையை மதித்துவரும் பண்புடைய அரசாகும். உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசு வழக்கறிஞர்களான வி.ஜி. பிரகாசம், டி. ஹரிஷ்குமார் இருவரும் இந்த வழக்கு குறித்து எனது கவனத்துக்குக் கொண்டு வரவில்லை. உரிய காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.

உச்ச நீதிமன்றம் என் மீது கூறியுள்ள மிகக் கடுமையான விமர்சனத்துக்குப் பொறுப்பேற்று அந்த வழக்கறிஞர்கள் இருவரும் தங்களின் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
 


லத்தீன் அமெரிக்க, மேற்கிந்திய நாடுகளில் வறுமையின் பிடியில் மேலும் 1.60 கோடி பேர்!

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

லத்தீன் அமெரிக்க, மேற்கிந்திய நாடுகளில் வறுமையின் பிடியில் மேலும் 1.60 கோடி பேர்!

நியூயார்க், ஜூலை 26: உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளைச் சேர்ந்த 1 கோடியே 60 லட்சம் பேர் வறுமையின் கோரப்பிடிக்குத் தள்ளப்படும் நிலையில் உள்ளதாக, ஐ.நா. நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கச் சுகாதார அமைப்பின் இரு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய நாட்டு சபையின் 13 அமைப்புகளைச் சேர்ந்த பிராந்திய இயக்குநர்

கள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.

அத்துடன், லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளில் ஐக்கிய நாட்டு சபையின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்கை எட்டுவதற்காக இணைந்து செயல்படவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

உலக நாடுகள் சந்தித்து வரும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு 2015-ம் ஆண்டுக்குள் தீர்வு காண்பதென்பது ஐக்கிய நாட்டு சபையின் புத்தாயிரம் மேம்பாட்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமமாகப் பயனடையவில்லை: இந்த இலக்கை எட்ட லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

எனினும், இதன் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சமமாகப் பயனடையவில்லை என்றார் அமெரிக்கச் சுகாதார அமைப்பின் இயக்குநர் மிர்தா ரோசஸ் பெரியகோ. லத்தீன் அமெரிக்க மற்றும் மேற்கிந்திய நாடுகளில் தற்போது 19 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 7 கோடி பேர் வறுமையின் கோரப்பிடியில் வாழ்கின்றனர்.

இதுபோன்ற நிலையில் உலக பொருளாதாரத்தில் 2007-ம் ஆண்டின் மத்தியில் இருந்து நிலவி வரும் அசாதாரண நிலை காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் மேலும் 1 கோடியே 60 லட்சம் பேர் வறுமையின் கோரப்பிடிக்குத் தள்ளப்படும் நிலையில் உள்ளனர் என்று மிர்தா ரோசஸýம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 


கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது

July 28th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், அரசியல், தகவல் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

கத்தார் நாட்டில் இந்திய மீனவர்கள் நான்கு பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் நான்கு பேரை கத்தார் கடற்படையினர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கைது செய்து, காவலில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

நான்கு மீனவர்களும் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திசை மாறி கத்தார் பகுதிக்குச் சென்றதாகவும், அந்நேரத்தில் அந்நாட்டு கடற்படையினர் வந்து தங்களை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளர்.

எனினும் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. அவர்களது படகுகள் கத்தார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என, கத்தாரில் உள்ள இந்தியர்களுக்கான உதவும் அமைப்பின் தலைவர் மோகன் தாமஸ் தெரிவித்தார். நான்கு பேரையும் விடுவித்து கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கத்தாரில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்கள் தெரிவித்தனர்.