கிரிக்கெட் | சற்றுமுன்...




ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் சாம்பியன்

July 7th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், இந்தியா, இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை மீண்டும் `சாம்பியன்’
இந்திய கனவை தகர்த்தார், மென்டிஸ்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ், இந்தியாவின் கனவை சிதறடித்தார்.

இறுதிப்போட்டி

6 நாடுகள் பங்கேற்ற 9-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்தது. இதில் கராச்சியில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரவின்குமாருக்கு பதிலாக உத்தப்பா சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் முந்தைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த சமிந்தா வாஸ், அஜந்தா மென்டிஸ் மீண்டும் திரும்பினர்.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோனி முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் இலங்கை அணியின் இன்னிங்சை தொடங்கினார்கள். 2-வது ஓவரில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி ஆரம்பமானது. சங்கக்கரா (4 ரன்) ரெய்னாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார். இதன் பிறகு ஒரு பக்கம் ஜெயசூர்யா சரவெடியாய் வெடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ஜெயவர்த்தனே 11 ரன்னிலும் (19 பந்து, ஒரு பவுண்டரி), கபுகேதரா 5 ரன்னிலும் (11 பந்து), சமர சில்வா ரன் ஏதுமின்றியும் (0), இஷாந்த் ஷர்மா பந்து வீச்சுக்கு இரையானார்கள். 12-வது ஓவரில் 66 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தத்தளித்தது.

ஜெயசூர்யா சதம்

இந்த சூழலில் ஜெயசூர்யாவுடன், தில்ஷன் ஜோடி சேர்ந்தார். விக்கெட் சரிவை பற்றி துளியும் கவலைப்படாமல் ஜெயசூர்யா தனது வழக்கமான பாணியில் வெளுத்து வாங்கினார். அவர் 56 ரன்களில் இருந்த போது மிட்-ஆன் திசையில் நின்ற ஆர்.பி.சிங் கடினமான ஒரு கேட்ச்சை கோட்டை விட்டார். அதன் பலனை ஆர்.பி.சிங் உடனே அனுபவிக்க நேர்ந்தது. அவர் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சரும், 2 பவுண்டரியும் ஜெயசூர்யா விளாசி, திகைக்க வைத்தார். ஜெயசூர்யா அதிரடியால், இலங்கை அணியின் ரன்-ரேட் 6 ரன்களுக்கு மேலாகவே சென்று கொண்டிருந்தது. ஸ்கோர் 300 ரன்களை தாண்டலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அபாரமாக ஆடிய ஜெயசூர்யா 79 பந்துகளில் தனது 27-வது சதத்தை தொட்டார். இந்தியாவுக்கு எதிராக அவர் கண்ட 6-வது சதமாகும்.

சதத்திற்கு பிறகு ஜெயசூர்யா மிகவும் களைத்து போனார். தவிர, ஓஜாவும், ஷேவாக்கும் சுழற்பந்து வீச்சில் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் மிடில் பகுதியில் ரன் வேகம் வெகுவாக குறைந்தது. ஜெயசூர்யாவும், தில்ஷனும் ஒன்று, இரண்டு ரன்கள் வீதமே எடுத்தனர்.

ஸ்கோர் 197 ரன்களாக உயர்ந்த போது, முக்கியமான கட்டத்தில் இந்த ஜோடி பிரிந்தது. ஜெயசூர்யா 125 ரன்களில் (114 பந்து) குவித்த நிலையில், ஷேவாக் பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மாவிடம் கேட்ச் ஆனார். அவரது ரன்னில் 9 பவுண்டரியும், 5 சிக்சரும் அடங்கும். அணியை சரிவில் இருந்து மீட்ட இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாகும். சிறிது நேரத்தில் தில்ஷனும் (56 ரன், 74 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழந்தார்.

 

273 ரன்கள் சேர்ப்பு

இதன் பிறகு ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வந்தது. 20-40-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இறுதி கட்டத்தில் வாஸ் (19 ரன்), குலசேகரா (29 ரன், 29 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் மட்டும் குறிப்பிடும்படி இருந்தது. முடிவில் இலங்கை அணி 49.5 ஓவர்களில் 273 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய தரப்பில் ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளும், ஷேவாக் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ஷேவாக் அரை சதம்

அடுத்து 274 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பை என்ற இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய ஷேவாக், பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரிக்கு ஓட விட்டு மிரட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கம்பீர் 6 ரன்களில் ஏமாற்றி நிலையில், அடுத்து சுரேஷ் ரெய்னா ஆட வந்தார். மின்னல் வேகத்தில் ஆடிய ஷேவாக் 26 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் ஆசிய கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

ஆனால், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மென்டிஸ் பந்து வீச தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கு மாறியது. அவரது பந்தில் ஷேவாக் (60 ரன், 36 பந்து, 12 பவுண்டரி), ஸ்டம்பிங் ஆனார். அடுத்து வந்த யுவராஜ்சிங் (0) அதே ஓவரில் போல்டு ஆக இந்தியா அதிர்ந்தது. இதன் பிறகு ரெய்னா (16 ரன்), ரோகித்ஷர்மா (3 ரன்) ஆகியோரையும் மென்டிஸ் காலி செய்ய இந்தியா பெரும் சரிவுக்குள்ளானது. கேப்டன் டோனி-உத்தப்பா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு சிறிது நேரம் போராடினாலும், இந்தியாவை அவர்களால் நிமித்த முடியவில்லை. உத்தப்பா 20 ரன்களில் (41 பந்து) எல்.பி.டபிள்ï. ஆனார்.

இலங்கை சாம்பியன்

அடுத்து மீண்டும் பந்து வீச வந்த மென்டிஸ் மேலும் 2 விக்கெட்டுகளை சரித்து இந்தியாவை முழுமையாக தோல்வி பாதைக்கு தள்ளினார். கடைசி வரை போராடிய டோனி 49 ரன்களில் (74 பந்து, 4 பவுண்டரி) வெளியேற இந்திய அணி 39.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதனால் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.

இலங்கை தரப்பில் மென்டிஸ் 13 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் ஓர் வீரர் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். 23 வயதான மென்டிஸ் இதுவரை 8 ஒரு நாள் போட்டிகளில் தான் ஆடியிருக்கிறார். அவர் தான் எங்களுக்கு துருப்பு சீட்டாக இருப்பார் என்று இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே சொல்லியிருந்தார். அதனை அவர் நிரூபித்தும் காட்டி விட்டார். லீக்கில் அடைந்த தோல்விக்கும் இந்தியாவை பழிதீர்த்து கொண்டனர். முன்னதாக இலங்கை அணி 1986, 1997, 2004 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மென்டிஸ் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றார். அவர் தொடரில் மொத்தம் 17 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா பரிதாபம்

இந்தியா ஏற்கனவே 4 முறை ஆசிய கோப்பையை வென்றிருந்தாலும், 1995-ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய கோப்பையை முகர்ந்ததில்லை. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிராக மோதிய இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை. அந்த சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு ஆசிய இறுதிப்போட்டியிலும் இந்திய அணி, இலங்கையிடம் தான் தோற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

இலங்கை

ஜெயசூர்யா (சி) இஷாந்த் (பி) ஷேவாக் 125

சங்கக்கரா (ரன்-அவுட்) 4

ஜெயவர்த்தனே (சி) ரோகித் (பி) இஷாந்த் 11

கபுகேதரா (சி) ரெய்னா (பி) இஷாந்த் 5

சமர சில்வா (பி) இஷாந்த் 0

தில்ஷன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 56

வாஸ் (பி) ஆர்.பி.சிங் 19

குலசேகரா (நாட்-அவுட்) 29

துஷாரா எல்.பி.டபிள்ï. (பி) ஆர்.பி.சிங் 5

மென்டிஸ் (பி) ஆர்.பி.சிங் 8

முரளிதரன் (சி) டோனி (பி) இர்பான் பதான் 2

எக்ஸ்டிரா 9

மொத்தம் (49.5 ஓவர்களில் ஆல்-அவுட்) 273

விக்கெட் வீழ்ச்சி: 1-11, 2-34, 3-66, 4-66, 5-197, 6-213, 7-236, 8-256, 9-264

பந்து வீச்சு விவரம்

ஆர்.பி.சிங் 9-1-67-3

இஷாந்த் ஷர்மா 10-1-52-3

இர்பான் பதான் 9.5-0-67-2

ஓஜா 10-1-38-0

ஷேவாக் 8-0-30-1

ரோகித் ஷர்மா 3-0-11-0

இந்தியா

கம்பீர் (சி) தில்ஷன் (பி) வாஸ் 6

ஷேவாக் (ஸ்டம்பிங்) சங்கக்கரா (பி) மென்டிஸ் 60

ரெய்னா (பி) மென்டிஸ் 16

யுவராஜ்சிங் (பி) மென்டிஸ் 0

டோனி (சி) சங்கக்கரா (பி) வாஸ் 49

ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்ï (பி) மென்டிஸ் 3

உத்தப்பா எல்.பி.டபிள்ï (பி) முரளிதரன் 20

இர்பான் பதான் (சி) ஜெயவர்த்தனே (பி) மென்டிஸ் 2

ஆர்.பி.சிங் (பி) மென்டிஸ் 0

ஓஜா (நாட்-அவுட்) 6

இஷாந்த் ஷர்மா (பி) குலசேகரா 8

எக்ஸ்டிரா 3

மொத்தம் (39.3 ஓவர்களில் ஆல்-அவுட்) 173

விக்கெட் வீழ்ச்சி: 1-36, 2-76, 3-76, 4-93, 5-97, 6-135, 7-154, 8-154, 9-160

பந்து வீச்சு விவரம்

வாஸ் 9-0-55-2

குலசேகரா 6.3-0-26-1

துஷாரா 8-0-51-0

மென்டிஸ் 8-1-13-6

முரளிதரன் 8-0-26-1


கிளன் மெக்ராத் மனைவி மரணம்

June 22nd, 2008 பகுப்புகள்: உடல்நலம், கிரிக்கெட், பெண்கள், மரணம் | தொகுப்பாளர்: சற்றுமுன் - வினையூக்கி | மறுமொழிகள் இல்லை » |

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 42. அவர் மார்பக புற்றுநோயினாலும் எலும்பு புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு சிலகாலமாக மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று இருந்த மெக்ராத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மெக்ராத் தம்பதியினர் மெக்ராத் பவுண்டேசன் என்ற அமைப்பை மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக நடத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மெக்ராத் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மெக்ராத் பவுண்டேசன் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்


ஹர்பஜன் சிங்க்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை

April 28th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்கு 11 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்ட்டுள்ளது. சக வீரர் ஸ்ரீசாந்தை அறைந்ததற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் ஒரு ஆட்டத்தில் மும்பை அணியின் தலைவராக இருந்த ஹர்பஜன் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரரான சாந்தகுமாரன் ஸ்ரீசாந்த்தை ஆடுகளத்தில் வைத்து அடித்தது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

இதைத் தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இது குறித்த விசாரணையை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் போட்டி நடுவருமான ஃபரூக் இஞ்ஜினியர் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் முடிவில் ஹர்பஜன் சிங் மீதான குற்றச்சாட்டி நிரூபிக்கப்பட்டது எனவும், அதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில், 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலரான நிரஞ்சன் ஷா தமிழோசையிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

விழியம்:

1. YouTube - Sreesanth Crying In Mohali IPL

2. YouTube - Sreesanth and Harbhajan Singh :: THE WHOLE THINGS

மேலும் விவரங்களுக்கு:

1. The Hindu News Update Service: “Harbhajan banned for rest of IPL, to lose Rs. 3 cr.”

2. BBC SPORT | Cricket | International Teams | India | Harbhajan given long ban for slap

3. BCCI appoints Nanavati as commissioner in Harbhajan enquiry


முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் சென்ற கார் பேருந்துடன் விபத்து

April 14th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

ஞாயிறு காலை மும்பையின் புறநகர் நவிமும்பை பகுதியில் உள்ள பாம்பீச் சாலையில், இதனை தொகுக்கும் பதிவரின் வீட்டருகே, மாநில அரசுபேருந்துடன் முன்னாள் அணித்தலைவர் முகமது அசாருத்தீனின் மகிழ்வுந்து மோதியதில் சிறுகாயங்களுடன் அவர் தப்பினார்.அவரும் அவரது ஓட்டுநர் அமர்நாத் அல்குபாலும் அடுத்துள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிட்சை/முதலுதவி அளிக்கப்பட்டனர். அசாரின் இரு மகன்களும் பின்ன்னிருக்கையில் பயணம் செய்திருந்தனர்; அவர்களுக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. உரான் சென்று கொண்டிருந்த பேருந்தில் சில பயணிகளே இருந்தனர். அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் காயமேதும் ஏற்படவில்லை.

அசாரும் அவரது மக்களும் சோலாப்பூரில் கிரிக்கெட் விளையாட தங்கள் ஹோண்டா CR-V வண்டியில் சென்று கொண்டிருந்தனர். வண்டியிலிருந்த காற்றுப்பைகள் உப்பியதால் அசாரும் ஓட்டுநரும் தப்பியதாக காவல்துறையினர் கூறினர்.

Azhar’s car hit by speeding bus


ஒரு வரிச் செய்திகள் - ஐ.ஐ.எம். & ஜக்மோகன் டால்மியா

March 27th, 2008 பகுப்புகள்: கல்வி, கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | ஒரு மறுமொழி » |

பெங்களூருவில் உள்ள இந்திய நிர்வாகக் கழகம் (IIM) 2008-09 ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தியுள்ளது. (விவரங்களுக்கு: Top B-schools to join IIMs’ fee-hike trek - Education - Services)

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தில் பணத்தில் முறைகேடு செய்ததாக கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா கைதாகி, விடுதலை செய்யப்பட்டார். (விவரங்களுக்கு: BBC NEWS | South Asia | Indian cricket chief in the dock: Dalmiya embezzled Rs 2.90 cr)

மேலும்: விடுதலை


பார்வையாளரை தாக்கியதற்காக சைமண்ட்ஸிற்கு தண்டனை ?

March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், குற்றம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

இன்று நடந்த சிபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆட்டத்தின்போது  நிர்வாணமாக பார்வையாளர்  ஆட்டக்களத்தில் நுழைந்து  இருமுறை ஆட்டம் தடைபட்டது. இவ்வாறு ஆஸ்திரேலியாவின் ஆட்டத்தின்போது நுழைந்த ஒருவர் காவலர்களை சமாளித்து ஓடிவருகையில் அவர்மீது சைமண்ட்ஸ் ரக்பி ஆட்ட சாயலில் தோளில் மோதி கீழே தள்ளினார்.

இதனை நடுவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டால் ஐசிசியின் விதி எண் 4.2இன் படி குற்றம் சாட்டப்படலாம். இது எதிரணி வீரரையோ தாக்குவதை குறித்தது. இவ்விதியின்படி குற்றமிழைத்தவர் ஐந்து டெஸ்ட் பந்தயங்களுக்கோ 10 ஒருநாள் பந்தயங்களுக்கோ தடை செய்யப்படலாம்.

Symonds may face punishment for man-handling a spectator


கிரிக்கெட்:விறுவிறுப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

March 4th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | தொகுப்பாளர்: மணியன் | 2 மறுமொழிகள் » |

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் இரண்டாம் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.இதனால் இந்த முத்தரப்பு போட்டித் தொடரை வென்று ஆஸ்திரேலியாவின் சொற்களை செயலால் வென்றுள்ளது.

இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும்(91), யுவராஜ் (38),அணித்தலைவர் தோனி(36)யின் நிதானமான ஆட்டமும் வித்திட்டன. பிரிஸ்பேனில் ஊலூன்காபா அரங்கில் நடந்து முடிந்த இப்போட்டியில், முதலில் ஆடத் தொடங்கிய இந்தியா 258 ஓட்டங்களை 9 விக்கெட் இழப்பிற்கு எடுத்தது.259 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 249 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது..

பிரவீண்குமார் அதிரடியாக மூன்றுவிக்கெட்களை ஆஸ்திரேலியா அணியின் 32 ஓட்டங்களுக்குள்ளேயே வீழ்த்தி வெற்றிக்கான வழி வகுத்தார். பின்னர் லீயின் விக்கெட்டை வீழ்த்தி 4/46 என்ற கணக்கில் தனது 10 ஓவர்களை வீசினார். மற்ற விக்கெட்களை சிரிசாந்த் (2/43),பதான் (2/54)மற்றும் ஹர்பஜன் (1/44) எடுத்தனர். யுவராஜ் ஹைய்டனை ரன் அவுட் செய்தார்.


முதல் இறுதி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

March 2nd, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடரின் முதல் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

இந்த வெற்றிக்கு, சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டமும், ரோஹித் ஷர்மாவின் நிதானமான ஆட்டமும் வித்திட்டன. சிட்னியில் நடந்து முடிந்த இப்போட்டியில், 240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து, 42-வது சதத்தைப் பூர்த்தி செய்த சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 120 பந்துகளில் 117 ரன்கள் குவித்ததற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவருக்கு சிறந்த இணையாக விளையாடிய ரோஹித் ஷர்மா 66 ரன்கள் எடுத்தார்.

துவக்க ஆட்டக்காரர் உத்தப்பா 17 ரன்கள் எடுத்தார்; தோனி ஆட்டமிழக்காமல் 12 ரன்கள் எடுத்தார். யுவராஜ் சிங் 10 ரன்களையும், கம்பீர் 3 ரன்களையுமே எடுத்தனர்.

முழுவதும் வாசிக்க: யாஹூ | எம்.எஸ்.என். | ஏ.ஓ.எல்.


டோனியை ஆறுகோடி கொடுத்து வாங்கியது சென்னை!

February 20th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட் | தொகுப்பாளர்: லக்கிலுக் | ஒரு மறுமொழி » |

Mahendra Singh Dhoni

மும்பை: மும்பையில் இன்று நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோணி ரூ. 6  கோடிக்கு ‘விற்கப்பட்டார்’. அவரை பெரும் விலை கொடுத்து சென்னை அணி ‘வாங்கியுள்ளது’. அதேபோல முத்தையா முரளீதரனையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் 20-20 போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 8 அணிகளுக்கான வீரர்களை ஏலம் விடுவது இன்று முற்பகல் மும்பையில் தொடங்கியது.

முதலில் ஆறு முக்கிய வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அதில் அதிகபட்சமாக டோணியை ரூ. 6 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதேபோல இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன் ரூ. 2.4 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

அதிரடி வீரர் ஆடம் கில்கிறைஸ்ட் ரூ. 2.8 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.

இலங்கை கேப்டேன் மகிளா ஜெயவர்த்தனேவை ரூ. 1.9 கோடிக்கு மொஹாலி அணி ஏலத்தில் எடுத்தது.

ஜெய்ப்பூர் அணி, ஷான் வார்னேவை ரூ. 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

சோயிப் அக்தரை, ஷாருக்கானின் கொல்கத்தா அணி ரூ. 1.7 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இன்றைய முதல் கட்ட ஏலத்தில் அதிக விலைக்குப் போனவர் டோணிதான்.
2வது கட்ட ஏலத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யா 9.75 லட்சம் டாலருக்கு விலை போயுள்ளார். அவரை மும்பை அணி வாங்கியுள்ளது.

ஹர்பஜன் சிங் 8.50 லட்சம் டாலருக்கு விலை போயுள்ளார். அவரை மும்பை அணி வாங்கியுள்ளது.

சங்கக்காராவை 7 லட்சம் டாலருக்கு மொஹாலி அணி விலைக்கு வாங்கியுள்ளது.

அனில் கும்ப்ளேவை பெங்களூர் அணி 5 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Source: Oneindia


சேவாக் ‘கோமாளி’:ஆஸ்திரேலிய செய்தித்தாள்

February 13th, 2008 பகுப்புகள்: ஆஸ்திரேலியா, ஊடகம், கிரிக்கெட் | தொகுப்பாளர்: சிறில் அலெக்ஸ் | ஒரு மறுமொழி » |

ஆஸ்திரேலிய செய்தித் தாள் ஒன்று சேவாகின் பெச்சுக்கு ஸ்டுவர்ட் கிளார்க் அளித்த பதிலை வெளியிடுகையில் தலைப்பில் இந்தியாவின் வீரேந்திர சேவாக்கை கோமாளி என அழைத்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கிளார்க் தன் பதிலில் கோமாளி எனும் வார்த்தையை பயன்படுத்தாதபோதிலும் செய்தியின் தலைப்பு அவ்வாறு வைக்கப்பட்டிருந்தது. இந்திய அணியிலிருந்து இதற்கு இதுவரை எந்த அதிகாரபூர்வ எதிர்ப்பும் வரவில்லை.

முன்னதாக சேவாக் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோற்றுவிடும் எனப் பயப்படுவதாக தெரிவித்தார்.

‘Clown’ Sehwag - DNA India


8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை வீழ்த்தியது

February 12th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இன்றைய 5ம் ஒரு நாள் ஆட்டத்தில், இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் மோதிய முதல் ஆட்டங்கள் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 3வது ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 128 ரன் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. 4 வது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்நிலையில்,5 வது ஒரு நாள் ஆட்டம் கான்பெராவில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக துவங்கியதால், போட்டி 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இல‌ங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியா களம் இறங்கியது.

சேவாக் 14, சச்சின் 32, மற்றும் கம்பீர் 35, தோனி 31 மற்றும் யுவராஜ் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். சர்மா 70 ரன்களுடனும், உத்தப்பா ரன் எதுவும் எடுக்காமலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.

நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலங்கை அணி களமிறங்கியது. மழை அபாயம் காரணமாக இலங்கையின் ஓவர்கள் 21 ஆகவும், வெற்றி இலக்கு 154 ரன்களாகவும் குறைக்கப்பட்டது.

துவக்க ஆட்டக்காரர் ஜெயசூர்யா 13 பந்துகளில் 27 ரன் குவித்து சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அடுத்து களமிறங்கிய சங்கக்காரா 10 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு துவக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷான் 62 ரன் எடுத்து இலங்கை அணியை வெற்றியை உறுதி செய்தார். ஜெயவர்த்தனே 36 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் கடைசி வரை களத்தில் நின்றனர்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 19வது ஓவரிலேயே இலங்கை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் ஹர்பஜன் சிங் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு உதவிய தில்ஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

பெர்த் நகரில் நடக்க உள்ள வரும் 15ம் தேதி நடைபெற உள்ள முத்தரப்பு தொடரின் அடுத்த (6வது) போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நன்றி: தமிழ் எம்.எஸ்.என் & யாஹூ

மேலும் விவரங்களுக்கு:

1. இலக்கு குறைப்பால் தோல்வி: தோனி - எம்.எஸ்.என்

2. Sports News Headlines in Tamil – Yahoo! Tamil: “தோல்விக்கு காரணம் மழையே : தோனி விளக்கம்”

3. Yahoo! Tamil: “மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வெற்றி எமதே:ஜெயவர்தனே”


ஒரு நாள் போட்டிகளில் பதினாறாயிரம் ஓட்டங்களை கடந்தார் சச்சின் டென்டுல்கர்

February 6th, 2008 பகுப்புகள்: கிரிக்கெட், விளையாட்டு | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

சச்சின் டெண்டுல்கர், செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு எதிரான ஒருதினக் கிரிக்கெட் போட்டியில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இப்போட்டியில் சச்சின் 28 ரன்களை எடுத்திருந்தபோது 16 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அவர் இதுவரை 409 போட்டிகள் மூலம் 16,007 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 41 சதங்களும், 87 அரை சதங்களும் (இதுவும் சாதனைதான்) அடங்கும்.

அவுட்டாகாமல் 186 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ரன்னாகும்.

அவருக்கு அடுத்தபடியாக இலங்கை வீரர் ஜயசூர்யா 404 போட்டிகள் மூலம் 12,207 ரன்களைச் சேர்த்துள்ளார். முதல் பத்து இடங்களில் இந்திய வீரர்கள் கங்குலி நான்காம் இடத்திலும் (311 போட்டிகள் மூலம் 11,363 ரன்கள்), திராவிட் 6-ம் இடத்திலும் (333 போட்டிகள் மூலம் 10,585 ரன்கள்), முன்னாள் கேப்டன் அசாருதீன் 9-ம் இடத்திலும் (334 போட்டிகள் மூலம் 9,378 ரன்கள்) உள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளில்: ஒருதினப் போட்டிகள் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டியிலும் விரைவில் சாதனை படைக்க உள்ளார் டெண்டுல்கர். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 11782 ரன்கள் சேர்த்துள்ள அவர், மேற்கிந்திய தீவுகள் வீரர் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 172 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அதையும் விரைவில் பூர்த்தி செய்து புதிய சாதனை படைக்க உள்ளார் டெண்டுல்கர்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. Tendulkar eighth in ICC rankings for batsmen - News - Commonwealth Bank Series - Indiatimes Cricket

2. Tendulkar first to climb 16,000-run mountain - Hindustan Times

3. The Hindu News: “Another milestone for Tendulkar”