தொழில் | சற்றுமுன்...




ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் பைலட்

July 27th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், பெண்கள், விமானம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸின் முதல் பெண் “பைலட்’

சென்னை, ஜூலை 26: ஏர் - இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் முதல் பெண் “பைலட்’ என்ற பெருமையை கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி பெறுகிறார்.

சென்னையிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.25 மணிக்குப் புறப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை அவர் இயக்குகிறார். அவருடன் அன்றைய தினம் செல்லும் துணை பைலட் அம்ரித் நம்தாரி, பணிப் பெண்கள் எஸ். பானு, பி. புடியா, எஸ். திவ்யா, பினால் வலண்ட் ஆகிய அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் செமலி க்ரோட்டபள்ளி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் 2004-ம் ஆண்டு சேர்ந்தார். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மொத்தம் 76 பைலட்டுகள் உள்ளனர்; இவர்களில் 6 பேர் பெண்கள்.


அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

July 18th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *சிறப்புச்செய்தி, அரசியல், அறிவிப்பு, சமூகம், சுற்றுச்சூழல், தொழில், பொருளாதாரம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

அலட்சியத்தால் வீழ்ச்சி அடைந்துவரும் தமிழக கதர் வாரியம்!

அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழக கதர் வாரியம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த கதரின் பெருமையை நாடு உணர்ந்திட அமைக்கப்பட்ட வாரியத்தின் வீழ்ச்சியைக் கண்டு நாட்டுப் பற்றாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு, 1960 - ம் ஆண்டு தமிழ்நாடு கதர் வாரியம் தொடங்கப்பட்டது.

தேன், சோப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை தரத்துடன் தயாரித்து விநியோகித்து வருகிறது. ஆனால், நலிந்துவரும் இந் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் இப்போது மெதுவாக மூடப்பட்டு வருகின்றன.

“”கைமுறை காகிதங்கள் தயாரிக்கும் 20 யூனிட்டுகளில் தற்சமயம் இரண்டு யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன. மூடிய யூனிட்டுகளை உயர் நீதிமன்றம் திறக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை திறக்கவில்லை.

19 சோப்பு யூனிட்டுகளில் இரண்டைத் தவிர மீதி யூனிட்டுகளில் வேலை செய்பவர்களுக்கு மாதத்தில் 7 அல்லது 10 நாள்கள் மட்டுமே வேலை உள்ளது. இதனால் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தினக்கூலிகள் போல் சம்பளம் கொடுக்கிறார்கள். சோப்பு உற்பத்தியாளர்களை நிரந்தரம் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் வழக்கை 23 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனர்” என்று குற்றம் சாட்டினார் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகரன்.

பெயரளவுக்கு மட்டுமே… வணிகம் அல்லாத அலுவலகப் பணிகள் செய்யும் ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு கொடுக்கிறது. ஆனால் துறையின் முன்னேற்றத்துக்கும் வருமானத்துக்கும் காரணமான உற்பத்தியாளர்களையும், தொழிலாளர்களையும் உற்பத்தி செய்த பொருள்களை விற்றால்தான் சம்பளம் என வாரியம் அறிவித்தது.

“”கதர் நூல் நூற்பு ஆலைகளும் பெயரளவில் செயல்பட்டு வருகின்றன. மூத்த கதர் நெசவாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறது. மேலும் அவர்கள் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கு தேன், சோப்பு முதலிய மற்ற பொருள்களை விற்றால்தான் அந்த ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதனால் பலர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர். ஆனால் கதர் வாரியமானது வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கிறது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே கதர் வாரியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.ஸ்ரீதர்.

பல கதர் நூற்பு ஆலைகள் மூடப்பட்டுவிட்டதால் கதர் வாரியம் வெளியிலிருந்து கதர் துணிகளை வாங்கி கதரின் முத்திரை வைத்து விற்கப்படுகிறது. அதே போன்று கதர் வாரியத்தின் மற்ற பொருள்கள் தனியாரிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“”கதருக்கு என தனித்துறை இருந்தும் தொழிலாளர்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கில் இருந்த தொழிலாளர்கள் இன்று ஆயிரக்கணக்காகக் குறைந்து விட்டனர். அதிகாரிகளின் முறையற்ற நிர்வாகம்தான் இதற்கு காரணம்”" என்றார் சந்திரசேகரன்.

என்ன செய்யலாம்…? அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகளை நீக்க வேண்டும். கதர் துறையை முன்னேற்றும் நோக்குடன் செயல்படும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட வேண்டும். அப்போதுதான் கிராம மக்கள் மத்தியில் மறுமலர்ச்சி ஏற்படும். கதர் வாரியமும் அதன் வீழ்ச்சியில் இருந்து மீளும்.

மருத்துவமனைகளில் சோப்பு, ஃபினாயில் போன்ற பொருள்கள் தனியாரிடமே வாங்கப்படுகின்றன. கதர் வாரியத்தின் உற்பத்திப் பொருள்களை அரசுத் துறைகள் அனைத்தும் வாங்கிவிட்டாலே வாரியம் வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிடும் என்று தொழிலாளர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். ஏற்றுக் கொள்ளுமா அரசு?


ரயில்வே பணிக்கு மதராஸா மாணவர்கள்!

July 7th, 2008 பகுப்புகள்: இரயில், வேலைவாய்ப்பு | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

மதரசா பட்டப் படிப்பு முடித்த இஸ்லாமிய மாண வர்கள் ரயில்வே துறை வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியு டையவர்கள் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித் துள்ளார்.

இஸ்லாமிய இளைஞர் கள் “மதரசா’ என்ற அரபிமொழி பட்டப் படிப்பை பாரம்பரியமாக கற்று வருகின்றனர். தற்போது இந்தப் பட்டம் பெற்றவர்கள் ரயில்வே துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான அரசு துறை சார்பான அனைத்து பணிகளும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட உள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் நேற்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் இன மக்களின் ஓட்டுவங்கியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இழக்காமல் பாதுகாக்கும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இதன்படி கடந்த ஆண்டு ராஜேந்தர் சர்ச்சார் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு சிறுபான்மையினர்கள் அரசு சார்பான துறைகளில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தது. மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் லாலு பிரசாத் யாதவும், ரயில்வே துறை களில் முஸ்லிம்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என அறிவித்து இருந்தார்.

அதன்படி தற்போது மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையால் வேலை பெறுவோரின் எண்ணிக்கை 5 சதவீதம் கணிசமாக உயரும் வாய்ப் புள்ளது.


பேச்சுவார்த்தை வெற்றி - லாரி ஸ்டிரைக் வாபஸ்

July 4th, 2008 பகுப்புகள்: *சற்றுமுன், *பொது, தகவல், தொழில், போக்குவரத்து | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | மறுமொழிகள் இல்லை » |

பேச்சுவார்த்தை வெற்றி - லாரி ஸ்டிரைக் வாபஸ்
    

 

Lorry

டெல்லி: கடந்த 2 நாட்களாக நாடு முழுவதும் நடந்து வந்த லாரிகள் வேலைநிறுத்தம் இன்று அதிகாலையில் வாபஸ் பெறப்பட்டது. மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும், சேவை வரியை ரத்து செய்ய வேண்டும், பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும்வரியை நீக்க வேண்டும், புதிய சாலைகளில் வரிவசூல் தொடர்பாக கமிட்டி அமைத்து அதில் லாரி உரிமையாளர்களையும் இடம் பெறச் செய்ய வேண்டும், சாதாரண டீசல் தாராளமாக விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2ம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

இதனால் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்ல வழியில்லாமல் தேங்கின. காய்கறிகள், சமையல் எண்ணை உள்ளிட்டவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்தது.

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து நேற்று மட்டும் 3 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.

மத்திய அரசுத் தரப்பில் போக்குவரத்துத்துறை இணைச் செயலாளர், தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைவர் ஆகியோரும், அகில இந்திய டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மொத்தமாக 32 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், நேற்று நள்ளிரவில் நடந்த 4வது சுற்றின்போது உடன்பாடு ஏற்பட்டது. லாரி உரிமையாளர்களின் அனைத்துக் கோரிக்ககளையும் ஏற்பதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொள்ள லாரி உரிமையாளர்கள்தீர்மானித்தனர்.

இதுகுறித்து அகிலஇந்திய டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளரும், கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவருமான சண்முகப்பா கூறுகையில், எங்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து 32 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டன. இதுதொடரபாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு அதிகாலை முதல் லாரிகளை இயக்க தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இதையடுத்து இன்று அதிகாலை முதல் லாரிகள் அனைத்தும் ஓடத் தொடங்கின. இதன் மூலம் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது. இனிமேல் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் வரத்து அதிகரித்து, விலைவாசி குறையும் என்ற நிம்மதி ஏற்பட்டுள்ளது.


டீசல் பற்றாகுறை: பலபாடசாலைகள் மூடல்

July 2nd, 2008 பகுப்புகள்: தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம், விலைவாசி | தொகுப்பாளர்: அதிரை புதியவன் | மறுமொழிகள் இல்லை » |

சென்னை மற்றும் அதன் சுற்றுபுற நகர்களில் இயங்கிவரும் பிரமாண்ட பொறியியல், மருத்துவ கல்லூரிகள், டீசல் பற்றாக்குறை காரணமாக மாணவர்களைக் கூட்டிவர பேருந்துகளை இயக்க முடியாததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக புறநகர்களில் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளுமே உள்ளூர் மாணவர்களை நம்பி செயல்படுபவைஅல்ல. இக்கல்லூரிகளில் 30 சத விகித மாணவர்கள் மட்டுமே ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கின்றனர். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களில் பெரும்பாலோர் கல்லூரிகள் இயக்கும் வாகனங்களிலும், வெகு சிலர் மட்டும் இரு சக்கர வாகனங் களிலும் கல்லூரிக்குச் சென்று வருகின்றனர்.
டீசல் சப்ளை சீராகும் வரை இனி பேருந்துகளை நிறுத்தி வைக்கலாம், கல்லூரிகளையும் மூடி வைக்கலாம் என நிர்வாகங்கள் முடிவெடுத்து அறிவிப்பாகவும் வெளியிட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை கல்லூரிகள் மூடப்படுவதாக நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
எஸ்ஆர்எம் போன்ற பெரிய கல்லூரிகள் மட்டும் தங்கள் கல்லூரி பேருந்துகளுக்கென்று தனியாக வளாகத்துக்குள்ளேயே பங்க் வைத்துள்ளன. அதாவது மொத்தமாக டீசல் வாங்கி இருப்பு வைத்துள்ளன. ஒரு வேளை இன்னும் சில தினங்கள் இதே நிலை நீடித்தால் அனைத்துக் கல்லூரிகளுமே மூடப்பட்டாலும் வியப்பில்லை.


பெட்ரோல் தட்டுப்பாடு நள்ளிரவுக்குள் சீராகும் - தலைமைச் செயலாளர்

July 1st, 2008 பகுப்புகள்: *சிறப்புச்செய்தி, சென்னை, தமிழ்நாடு, போக்குவரத்து, போராட்டம் | தொகுப்பாளர்: ✪சிந்தாநதி | மறுமொழிகள் இல்லை » |

தமிழ்கத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு காரணமாக இன்று காலை முதல் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்துகள் உட்பட வாகனங்களும் இயங்க இயலாத கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 3000க்கு மேற்பட்ட தனியார் பேருந்துகளும் 20 சதவீத அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டு விட்டன.

நிலைமை சீராகும்… திரிபாதி நம்பிக்கை

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து இன்று நள்ளிரவு முதல் அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் ஆரம்பமாகிறது.  இதற்கு முன்னதாக  பெட்ரோல் தட்டுப் பாடு காரணமாக இன்றே இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நிலைமை சீராகாத பட்சம் நாளை தமிழ்கத்தில் எந்த வாகனமும் சாலையில் காணப்படாது.
இதற்கிடையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக தலைமை செயலாளர் திரிபாதி தமிழகத்தில் டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இன்று நள்ளிவுக்குள் சகஜ நிலைக்கு திரும்பி விடும் என்று  தெரிவித்துள்ளார்.


குஜராத்: நர்மதையில் பேருந்து விழுந்து 44 பேர் மரணம்

April 16th, 2008 பகுப்புகள்: *பொது, போக்குவரத்து, விபத்து | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

புதன் காலை குஜராத் மாநில போக்குவரத்து கழக பேருந்தொன்று பொடெல்லி கிராமத்தில் அறுபது அடி ஆழமுள்ள நர்மதா நதியில் விழுந்ததில் பெரும்பாலும் பள்ளி செல்லும் சிறார் உள்ளிட்ட 44 பேர் மரணமடைந்துள்ளனர்.நான்கு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

அந்த பேருந்து டார்கோலிலிருந்து பொடெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது காலை 6:30 க்கு ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. பயணித்தவர்களில் பெரும்பான்மையினர் பள்ளி செல்லும் சிறார்களே. மீட்பு பணியை எளிதாக்க சர்தார் சரோவர் அணையிலிருந்து வெளியேறும் நீரை நிறுத்தி வைத்தனர். பேருந்து கால்வாயிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு விட்டது.

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு ஒரு இலக்கம் ரூபாய் நட்ட ஈடு அறிவித்துள்ளது.

Bus falls into Narmada canal, 44 killed

Gujarat: Bus carrying kids in mishap; 44 dead


கொல்கொத்தா-தாக்கா தொடர்வண்டி சேவை துவங்கியது

April 14th, 2008 பகுப்புகள்: இந்தியா, இரயில், விழா | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

43  வருடங்களுக்குப் பிறகு கொல்கொத்தாவிற்கும் பங்களாதேச தலைநகர் தாக்காவிற்கும் இடையேயான தொடர்வண்டி சேவைகள் இன்று துவங்கியது; இரு நகரங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் ‘மைத்ரி எக்ஸ்பிரஸ்’ –நட்பு விரைவுவண்டி– தனது பயணத்தை இரு அண்டைநாடுகளுக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துமாறு துவங்கியது.

ஆறு பெட்டிகள் கொண்ட தொடர்வண்டி அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது; இன்று காலை 0710 மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணப் முகர்ஜி தூரத்திலிருந்தே புறப்பட சமிக்ஞை கொடுக்க வங்காள புதுவருட தினமான முதல் பைசாகி நாளில் தனது 15 மணி பயணத்தை ஆரம்பித்தது. அதே நேரம் தாக்காவின் கண்டோன்மெண்ட் நிலையத்திலிருந்து கொல்கொத்தாவை நோக்கி அவர்களது தொடர்வண்டியை பயணிகளுக்கு பூக்கொத்துகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

1965 இல் பங்களாதேஷ் சண்டையின் போது இந்த சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 1996இல் இரு நகரங்களுக்கும் இடையே பேருந்து சேவை துவக்கப்பட்டது.

538 கிமீ தூரத்தில் 120 கி.மீ தூரம் இந்தியாவில் உள்ளது; மற்றவை பங்களாதேச பரப்பில் உள்ளது.

Kol-Dhaka train services resume after 43 yrs


விமானமோட்டிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சண்டை வலுக்கிறது

April 11th, 2008 பகுப்புகள்: சர்ச்சை, விமானம் | தொகுப்பாளர்: மணியன் | மறுமொழிகள் இல்லை » |

கோழிக்கோட்டில் ஏஇ இந்தியா விமானம் தாமதமானதை அடுத்து அதன் விமான தலைவர் ரஜத் ரானாவிற்கும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல் வகாபிற்கும் இடையே எழுந்த பிரச்சினை பூதாகாரமாக வளர்கிறது. விமான ஓட்டிகளின் சங்கம் வகாப் மன்னிப்பு கோரவில்லையெனில் உலக அளவில் எடுத்துச் சென்று அவரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க முயலப் போவதாக கூறியுள்ளது.  அவ்வாறு செய்யப்பட்டால் அவரால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்ல முடியாது.

அதே நேரம் எம் பி யின் ஆதரவாளர்கள் காப்டன் ரஜத் ரானாவின் பணிக்கு உலை வைக்கப் பார்க்கிறார்கள். அவர் தற்சமயம் துபாயில் தனது குடும்பத்தினருடன் உள்ளார். அவர திரும்பியபிறகே அவரது கருத்தை அறிய முடியும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் பாடேல் நடந்த சம்பவத்தின் முழு விவரம் அறிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறுவிதயம் பெரிதாக்கப் பட்டிருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

Wahab lobby takes on pilot


ஹைதராபாத் புதிய விமானதளம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

April 2nd, 2008 பகுப்புகள்: தகவல், விமானம் | தொகுப்பாளர்: மணியன் | ஒரு மறுமொழி » |

ஹைதராபாத்தின் சம்சாபாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையத்தை பார்வையிட கடந்த சிலநாட்களாக பெருந்திரளான பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தனர். நகரிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ல இந்த நவீன கட்டிடத்தைக் காண கூடிய கூட்டத்தால் விமானதளத்தின் சேவைகள் தாக்குப் பிடிக்கமுடியாது பயணிகளுக்கு வசதிகுறைவு ஏற்பட்டது. கடந்த வாரயிறுதியில் மட்டும் ஒரு இலக்கத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.

இதனையடுத்து ராஜிவ்காந்தி பன்னாட்டு விமானதளத்தின் மேலாண்மை பயணிகளும் அவர்களை வழியனுப்பவோ/ வரவேற்கவோ உடன்வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளது. இருசக்கர, நாற்சக்கர வாகனங்களுக்கும் நிறுத்தும் வசதிக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

New Hyderabad airport bans entry of sightseers


போபால் விஷவாயுக் கசிவு: பாதிக்கப்பட்டவர்கள் தில்லியில் போராட்டம்

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, உடல்நலம், குழந்தைகள், சட்டம் - நீதி, சுகாதாரம், தொழில், பொருளாதாரம், போராட்டம், மரணம், வணிகம், விபத்து | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

இந்தியாவின் போபால் நகரில் கடந்த 1984ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், 24 ஆண்டுகளாகியும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று போராடிவருகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு 800 கி.மீ. பாதயாத்திரை நடத்தி, இவர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

ஆனால் அப்போது பிரதமர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரி, பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமையன்று புதுடெல்லி வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நன்றி: பிபிசி

மேலும் விவரங்களுக்கு:

1. AFP: Bhopal tragedy survivors reach Delhi after 37-day protest march

2. Tehelka - India's Independent Weekly News Magazine: “Timeline: The Toxic Trail”

3. Indians Pressure Dow on Bhopal Cleanup - washingtonpost.com


4 விவசாயிகள் தற்கொலை

March 30th, 2008 பகுப்புகள்: இந்தியா, தற்கொலை, தொழில், பொருளாதாரம், மரணம், வணிகம், விலைவாசி, விவசாயம் | தொகுப்பாளர்: பாஸ்டன் பாலா | மறுமொழிகள் இல்லை » |

மகாராஷ்டிரம், விதர்பா பகுதியில் கடன்தொல்லை காரணமாக 2 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். மழையால் பயிர்கள் நாசமானதால் கேரள விவசாயி ஒருவரும், ஆந்திர விவசாயி ஒருவரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

நந்துரா பிங்லே கிராமத்தைச் சேர்ந்த கோட்டே (30), பாட்குலி கிராமத்தைச் சேர்ந்த தேஷ்முக் (32) ஆகியோர் உள்ளூர் வங்கியில் கடன் பெற்றிருந்தனர். இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

கேரளத்தில் பெய்த பலத்த மழை காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாயின. இதில் பாதிக்கப்பட்ட ஆலப்புழை மாவட்ட விவசாயி புஸ்கரன் என்பவர் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துக் கொண்டார். இதே பிரச்னை காரணமாக ஆந்திரத்தின் கிருஷ்ணா மாவட்ட விவசாயி அச்சுதராமையா என்பவரும் தற்கொலை செய்துக் கொண்டார்.

நன்றி: தினமணி

மேலும் விவரங்களுக்கு:

1. 74 farmers suicides in Vidarbha after Chidambaram's farm loan waiver

2. » 14 farm suicides in three days in Vidarbha

3. The Telegraph - Calcutta (Kolkata) | Nation | Waiver can’t stop Vidarbha suicides