அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக்கிய பீகார் வெள்ளம் | சற்றுமுன்...




அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக்கிய பீகார் வெள்ளம்

அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக்கிய பீகார் வெள்ளம்

ஒரு மாதத்துக்கு முன்பு வரை ஏழை-பணக்காரர் என்ற பாகுபாட்டுடன் வாழ்ந்தவர்களை பீகார் வெள்ளம் ஒன்று சேர்த்து வைத்துள்ளது.

அடித்துச் செல்லப்பட்ட உடைமைகள்

கோசி நதியின் வெள்ளப்பெருக்கு, தொடர் மழை காரணமாக பீகார் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடு, வாசல்களை இழந்து அனாதைகள் போல் பரிதவித்து நிற்கிறார்கள். ஏராளமானவர்களின் உடைமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

ஒவ்வொரு வெள்ள நிவாரண முகாமிலும், ஆயிரக்கணக்கானோர் தங்களது குழந்தைகளுடன் நிராதரவற்று ஒரு வேளை சோற்றுக்காக கையில் தட்டுகளை ஏந்தியடி நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வாங்கிச் செல்லும் காட்சி காண்போரை உருக வைப்பதாக இருக்கிறது.

பொதுவாக பீகாரில் ஏழை, பணக்காரர் என்று பாகுபாடும், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பிரிவினையும் அதிகம். இதெல்லாம் கடந்த மாதம் 18-ந்தேதிக்கு முன்புதான். இப்போது அங்கே நிலைமை தலைகீழ்.

நிவாரண முகாம்களில் அடைக்கலம்

மாநிலத்தில் உள்ள அனைத்து வெள்ள நிவாரண முகாம்களிலும் மன்னர் பரம்பரையில் வந்தவர்களும், நிலப்பிரபுக்களும், பெரும் பணக்காரர்களும் தங்களது சொத்துக்களை இழந்து அடைக்கலமாகி இருக்கிறார்கள்.

தங்களது நிலங்களில் கூலி வேலை பார்த்த தொழிலாளர்களுடன் சேர்ந்து நிவாரண முகாம்களில் படுத்தும் உறங்குகிறார்கள். உணவுக்காக அலுமினிய தட்டுகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுடன் நீண்ட கிï வரிசையில் காத்திருக்கிறார்கள்.

பூர்ணியா நகர ரெயில் நிலையம் அருகே உள்ள வெள்ள நிவாரண முகாம் ஒன்றில் சதாப்பூரைச் சேர்ந்த ரகுவன்ஸ்ஷா என்பவரும் தங்கி இருக்கிறார். 500 ஏக்கர் நிலம் இவரிடம் இருக்கிறது. இவருக்குதிரண்ட சொத்தும் உண்டு.

ஆனால் கோசி நதியின் கோரக் கைகள் இவரது வீட்டின் உடைமைகள் அனைத்தையும் கபளீகரம் செய்து விட்டன. வீட்டில் இருந்த எல்லா நகை, பணம், கால்நடைகள் அனைத்தையும் இழந்து இப்போது பூர்ணியா வெள்ள நிவாரண முகாமில் குடும்பத்துடன் அவர் அடைக்கலமாகியுள்ளார்.

கடவுளுக்கு நன்றி

இவர் தங்கியிருக்கும் இதே முகாமில் இவரது நிலத்தில் கூலி வேலை பார்த்த நூற்றுக்கணக்கான கூலி வேலையாட்களும் தங்கி இருக்கிறார்கள். இவரது மகன்கள் 4 பேரும் ஆங்கில மீடியப் பள்ளியில் படிப்பவர்கள். அவர்கள் படிப்பு வாசனையே அறியாத ஏழைக்குழந்தைகளுடன் இந்த முகாமில் ஒன்றாக விளையாடி படுத்து உறங்குகிறார்கள்.

எனினும், தான் சொத்து சுகங்களை இழந்தது குறித்து ரகுவன்ஸ்ஷா கவலை கொள்ளவில்லை. மாறாக, “மதிப்புமிக்க உடமைகளை இழந்தது பற்றி எங்களுக்கு கவலையில்லை. கடவுள் அருளால் நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இவரைப் போலவே ரவீந்தர் பிரசாத் என்ற பெரும் பணக்காரரும் குடும்பத்தினருடன் தனது பண்ணையில் வேலை பார்த்த கூலியாட்களுடன் வெள்ள நிவாரண முகாமில் தங்கியிருக்கிறார்.

சகோதர பாசம்

மாதேபுரா, சுபோல், அரராரியா, சகர்ஷா ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் ரகுவன்ஸ்ஷா, ரவீந்தர் பிரசாத் போலவே நூற்றுக்கணக்கான முன்னாள் பணக்காரர்கள் தங்கியுள்ளனர்.

இப்போது ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமலும், உயர்ந்தவர், தாழ்ந்தவர் சாதிப் பிரிவினையும் இன்றி இவர்கள் சகோதர பாசத்துடன் வெள்ள நிவாரண முகாம்களில் ஒன்றாக ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

பீகார் மாநில வெள்ள இழப்பு எக்காலத்திலும் ஈடுகட்ட முடியாதது என்றாலும், ஏழை, பணக்காரரையும், அரசனையும், ஆண்டியையும் ஒன்று சேர்த்த வகையில் மட்டும் ஆறுதல் அடைந்து கொள்ள வைத்திருக்கிறது.

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்