அதிமுகவில் சேரப்போவது கருணாநிதி குடும்பத்தினர் தான்: ஜெயலலிதா அறிக்கை
அதிமுகவில் சேரப்போவது கருணாநிதி குடும்பத்தினர் தான்: ஜெயலலிதா அறிக்கை
சென்னை, செப். 1: முதல்வர் கருணாநிதியும் அவரது குடும்பத்தினரும் அ.தி.மு.க.வில் சேரும் காலம் விரைவில் வருமே தவிர, தி.மு.க.வில் நான் சேரும் காலம் வரவே வராது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசினார். வழக்குகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதியை திமுகவில் சேர்த்துக் கொண்டிருப்பது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “”ஜெயலலிதா மீதுகூட வழக்குகள் இருக்கின்றன. அவரே வந்தாலும்கூட சேர்த்துக் கொள்வோம்” என்று கூறினார்.
அதற்குக் கண்டனம் தெரிவித்து ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் தங்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் வந்து கேட்கும் காலம் விரைவில் வருமே தவிர, நான் போய் சேரும் காலம் நிச்சயமாக வரவே வராது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்து என்னிடம் ரூ.5 லட்சம் உதவி பெற்றதை கருணாநிதி மறந்துவிட்டார் போல இருக்கிறது.
என்மீது இருப்பவை எல்லாம் தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்குகள் என்பதையும், அவற்றில் 12-க்கும் மேற்பட்ட வழக்குகளில் நான் விடுதலை பெற்றிருக்கிறேன் என்பதையும் அனைவரும் அறிவர்.
தன் மீதும், தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் மீதும் இருந்த வழக்குகளை எல்லாம், கடந்த 27 மாத கால ஆட்சியில் வாபஸ் பெற்றிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால், 2001 முதல் 2006 வரையில் ஆட்சியில் இருந்தபோதிலும் கூட, என் மீதான வழக்குகளை வாபஸ் பெறாமல், நீதிமன்றங்களில் நேர்மையாக எதிர்கொண்டு, வென்று வருகிறேன்.
எனவே, என்னைப் பற்றியோ, என் மீதுள்ள வழக்குகளைப் பற்றியோ பேசுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்வது நல்லது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
குறிச்சொற்கள்: ஜெயலலிதா, வழக்கு, கருணாநிதி, குடும்பம், அரசியல்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்