நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்
நூலகங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை’: முதல்வர்
சென்னை, ஆக. 16: நூலங்களின் செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 120 கோடியில் உலக தரத்தில் அமைக்கப்பட உள்ள அரசு நூலக வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி சனிக்கிழமை அவர் பேசியது:-
தங்கம் தென்னரசுவை எதற்காக அமைச்சராக நியமித்தேனோ அது நிறைவேறியுள்ளது. எனது நினைப்பை நுகர்ந்து பார்த்து நிறைவேற்றுகிறார். அதில் ஏமாறவில்லை. நானும் ஏமாற மாட்டேன்.
யார், யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும், யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்து நாங்கள் செயல்படுகிறோம்.
கோட்டூர்புரம் எனது வாழ்க்கையின் முழுமையான அத்தியாயம். ஒரு பொதுத் தேர்தல் நேரத்தின்போது இப்பகுதியில் சிலர் என்னையும், உடன் வந்தவர்களையும் ஒரு மண்டபத்தில் சிறைவைத்து தாக்கினர்.
அவர்களிடம் இருந்து என்னை ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த சாரங்கன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் காப்பாற்றினர். அவர்களுக்கு வேஷ்டி, சேலைகளை பரிசாக அண்ணா வழங்கினார்.
அவர்கள் என்னைக் காப்பாற்றாவிட்டால், என்னை முதல்வராக நீங்கள் பார்த்திருக்க முடியாது. எனது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
வீடுகள்தோறும் நூலகம்: வீட்டில் உள்ள பொருள்கள் ஒவ்வொன்றும் அது, எந்த இடத்தில் வாங்கப்பட்டது என்பது குறித்து அதன் சரித்திரத்தைக் கூறுவார்கள். நூலகம் நமது அடிப்படைத் தேவை. வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்று விரும்பினார் அண்ணா. அவரது ஆவல் இன்னமும் நிறைவேறவில்லை. அதை நிறைவேற்றும் வகையில் நாம் நடைபோடுவோம். எனவே, இந் நூலகம் சிறப்பாக அமைக்கப்படும்.
வருங்காலத்தில் இந்த நூலகத்தை பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தினால், இந்த விழா வெற்றி பெற்றதாக அமையும்.
நூலகங்களின் செயல்பாடு சரியில்லை: தமிழகத்தில் மொத்தம் 3,924 பொது நூலகங்கள் உள்ளன. எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும்கூட, நூலகங்களின் சிறப்பு, செயல்பாடு போற்றத்தக்கதாக இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
எழுத்தாளர்களின் கோரிக்கையை ஏற்று, நூலகங்களில் பெறப்படும் புத்தகங்களின் எண்ணிக்கையை 1000-மாக அரசு உயர்த்தியுள்ளது. நூலகங்களுக்கு மேலும் அதிக புத்தகங்கள் தேவைப்படுமானால், இதை 2 ஆயிரமாக உயர்த்த அரசுக்கு அதிக நேரம் ஆகாது.
கோட்டூர்புரத்தில் நூலகம் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை நான் பெற்றதற்கு எனது மகள் கனிமொழியே காரணம் என்று குறிப்பிட்டனர். கனிமொழியின் ஆர்வத்தை செயல்படுத்தி இருக்கிறோம்.
விரைவில் இந்த நூலகம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழாவுக்கு என்னை அழைப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
இதில் அமைச்சர்கள் க. அன்பழகன், துரைமுருகன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலர் எல்.கே திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறிச்சொற்கள்: செயல்பாடு, நூலகம், முதல்வர்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்