எழுத்தாளர்கள் சிந்தனையாலே சமூகம் சீர்படும்’
எழுத்தாளர்கள் சிந்தனையாலே சமூகம் சீர்படும்’
மதுரை, ஆக. 16: எழுத்தாளர்களது சிந்தனையாலே சமூகம் சீர்படும் என, உலகத் தமிழர் பேரமைப்பு 6 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாட்டில் பேராசிரியர் க. நெடுமாறன் பேசினார்.
மதுரை அரசரடி இறையியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டுக்கு பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். திருவள்ளுவர் கழகத் தலைவர் கமலத்தியாகராஜன் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
மாநாடு வரவேற்புக்குழுத் தலைவர் ரெ. மாணிக்கம் வரவேற்றார். கவிஞர் இன்குலாப் மாநாட்டுத் தொடக்க உரையாற்றினார்.
அவர் பேசுகையில், படைப்பாளிகள் மனித நீதிக்காக போராடவேண்டும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவத்திடமிருந்து பாதுகாப்பு அளிப்பது மிகவும் முக்கியம் என்றார்.
பின்னர் எழுத்தாளர்களின் சமூகக் கடமைகள் எனும் பொருளிலான கருத்தரங்கை பேராசிரியர் பர்வீன் சுல்தானா தொடங்கி வைத்தார்.
பெண்ணிய நோக்கில் எனும் பொருளில் பேசிய அவர், சீனர்களைப் போல தமிழர்களும் மொழிப் பற்று மிக்கவர்களாக விளங்கவேண்டும். பெண்ணியம் என்பது குடும்ப உறவுகளை சிதைப்பதாக அமையும். எனவே பெண் விடுதலை குறித்து பேசுவது நல்லது என்றார்.
கருத்தரங்குக்கு தலைமை வகித்துப் பேசிய பேராசிரியர் க. நெடுமாறன் தமது உரையில், எழுத்தாளர்களது சிந்தனையாலே சமூகம் சீர்படும் என்றார்.
நூலகங்கள் சீரழிந்து கிடக்கின்றன: தமிழகத்தில் நூலகங்கள் சீரழிந்து கிடப்பதாக மாநாட்டில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
25 ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் நூலகங்கள் முற்றிலும் சீரழிந்துள்ளன. நூலகங்களுக்கு நூல்கள் வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. மேலும், தரமில்லாத நூல்கள் வாங்கப்படுகின்றன. போதுமான நூலகர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
தமிழ் எழுத்தாளர், திறனாய்வாளர்கள் நூலக ஆணைக் குழுவில் நியமிக்கப்பட வேண்டும். உலகளாவிய இலக்கியப் பரிசுத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கச்சத்தீவை இந்திய ஆளுகைக்கு உள்பட்ட பகுதியாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இழப்பீடு தர வேண்டும், வெளிநாடுவாழ் தமிழர்கள் தமிழகம் வர விசா தரப்பட வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு, தமிழ் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு, அயலகத் தமிழர் ஆகிய பொருள்களில் கருத்தரங்கு அமர்வுகள் நடைபெற்றன.
உலகப் பெருந்தமிழர் விருதுகள் வழங்கப்பட்டன. மாநாட்டில் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழ்ச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்