கருணாநிதி ஆட்சியில் குண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது மதுரை கூட்டத்தில் குண்டுகல்யாணம் பேச்சு
கருணாநிதி ஆட்சியில் குண்டு கலாச்சாரம் பெருகி வருகிறது மதுரை கூட்டத்தில் குண்டுகல்யாணம் பேச்சு
தமிழகத்தில் நடைபெற்று வரும் கருணாநிதி ஆட்சியில் வெடி குண்டு கலாச்ராம் பெருகி வருகிறது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.பேச்சாளர் குண்டுகல்யாணம் குற்றம்சாட்டினார்.
மதுரை மாநகர் மாவட்டம் சமயநல்லூர் பகுதி 6 வது வட்ட அ.தி.மு.க.சார்பில் கருணாநிதியின் மைனாரிட்டி தி.மு.க.ஆட்சியில் மக்கள் நலனை காக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கே.கே.நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்ட கழக பிரதிநிதி மானகிரி ஆர். மூர்த்தி தலைமை வகித்தார். பகுதி கழக செயலாளர் அண்ணா நகர் முருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.பேச்சாளரும் திரைப்பட நடிகருமான குண்டுகல்யாணம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.
தமிழகத்தில் மக்கள் நலனை காக்க கருணாநிதி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனை காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை போல தற்போது மைனாரிட்டி தி.மு.க.அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை . தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை , கொள்ளைகள் பெருகி கொண்டே வருகின்றன. தீவிரவாதம், தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் வெடி குண்டு புதையல்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு தமிழகம் , கருணாநிதி ஆட்சியில் சீரழிந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் வெடி குண்டு கலாச்ராம் பெருகி வருவதால் பொது மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் வானத்தை தொடும் அளவிற்கு உயரந்து வருகிறது. இரண்டு ரூபாய்க்கு அரிசி வழங்குகிறோம் என்று கூறிவிட்டு அத்யாவசியப்பண்டங்களின் விலையை உயர்த்தி வருகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் பல்வேறு துண்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் விலைவாசி கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட்டு தமிழகம் அமைதி பூங்காவாக காட்சியளித்தது. கருணாநிதியின் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல், ஆள்கடத்தலில் அமைச்சரே ஈடுபட்டு பதவி விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றமே கருணாநிதியின் ஆட்சியை கண்டிக்கும் அளவிற்கு ஒரு அராஜக அரசாங்கம் நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் உன்னிப்பாக பார்த்து வருகிறார்கள். சேது சமுத்திர திட்டம் என்ற போர்வையில் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடிக்க கருணாநிதி போட்ட தந்திரம் தற்போது எடுபடாமல் போய் விட்டது. ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு சுட்டிக்காட்டியும் மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டு மக்களின் வேதனையை கண்ணீரை துடைக்க ஜெயலலிதா ஒருவரால்தான் முடியும். மக்களுக்கு பிரச்சினை என்று வரும்போதெல்லாம் ஓடோடி வந்து அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவி ஜெயலலிதாதான். மக்களுக்கு உண்டான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்தி காட்டினார். எனவே தமிழகத்து மக்களை காப்பாற்றுவதற்கு ஜெயலலிதாவை தவிர வேறு எவரும் இல்லை. அவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் , அரியணை ஏற வேண்டும் என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.. எனவே ஜெயலலிதா விரைவில் தமிழக முதல்வராக அமர்வார் என்பதில் எள்ளளவும் சந்தேமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
குறிச்சொற்கள்: மதுரை, ஆட்சி, கருணாநிதி, கலாச்சாரம், குண்டு, குண்டுகல்யாணம்இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்