`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369
`மெட்ராஸ் டே’ ஒருவார கொண்டாட்டம்: சென்னைக்கு வயது 369
நகர் முழுவதும் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
சென்னையின் 369-வது பிறந்த நாள் விழா ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் 60 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
4-வது ஆண்டாக
1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை பிறந்தது. இப்போது 369 வயதாகிறது. பாரம்பரியமான இந்த சென்னையைப் பற்றி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கடந்த 3 ஆண்டுகளாக `மெட்ராஸ் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் `மெட்ராஸ் டே’ கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றி சென்னையில் `மெட்ராஸ் டே’ நிகழ்ச்சி அமைப்பாளர்கள் எஸ்.முத்தையா, வின்சென்ட் டி சவுசா, வி.ஸ்ரீராம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
60 நிகழ்ச்சிகள்
`மெட்ராஸ் டே’ கொண்டாட்டம் கடந்த ஆண்டுகளில் தென்சென்னையில் மட்டும் நடந்தது. இந்த ஆண்டு 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒருவாரத்திற்கு நகர் முழுவதும் குறிப்பாக ராயபுரம், அண்ணாநகர் போன்ற வடசென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். 50 அமைப்புகள் மொத்தம் 60 வகையான நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
பராம்பரியமிக்க சென்னையின் பிறந்த நாள் மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். ஜனவரி 26 குடியரசு தினம், ஆகஸ்டு 15 சுதந்திர தினம் என்பது போன்ற நாட்கள் மக்கள் மனதில் இருப்பதைப் போல சென்னை பிறந்த நாளும் மக்கள் மனதில் இடம்பெற வேண்டும்.
அரிய புகைப்படக் கண்காட்சி
பாரம்பரியமிக்க கட்டிடங்களின் வழியே நடந்து செல்லுதல், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பற்றி பேசுதல், ஆவணப்படம் திரையிடுதல், பராம்பரிய உணவுத் திருவிழா, வினாடி வினா, கட்டுரைப் போட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், அரிய புகைப்படக் கண்காட்சி, அஞ்சல் தலை, நாணயங்கள் கண்காட்சி ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
சென்னைத் துறைமுகம், சென்னைக் கோவில்கள், சிங்கார சென்னையின் சிறப்பு அம்சம், பழைய சென்னையில் நடந்த ஆளவந்தார் கொலை வழக்கு, நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு ஆண்டு அஞ்சலி, சென்னையும் சுதந்திரப் போராட்டமும் போன்ற பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
அண்ணாநகர் பூங்கா
காலையில், மை லேடீஸ் பூங்கா, அண்ணாநகர் டவர் பூங்கா, அருங்காட்சியகம் ஆகியவற்றில் மரங்களின் நடுவே நடக்கவும், மெரினா கடற்கரை மற்றும் அண்ணா சாலையில் ஊர்வலமாக நடந்து செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறிச்சொற்கள்: சென்னை, மெட்ராஸ் டே, வயது, கொண்டாட்டம்
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்