செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு | சற்றுமுன்...




செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு

செய்தி சேகரிக்கச் சென்ற கரூர் பத்திரிகையாளர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு

கரூர், ஆக. 9: செய்தி சேகரிக்கச் சென்ற போது ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கரூர் பத்திரிகையாளர்கள் 18 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

இதுபற்றிய விவரம்:

கரூர் அருகேயுள்ள தான்தோன்றிமலையில் ராயல் கோச் என்னும் பஸ் கட்டும் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் பழனிசாமி (55). இந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட பஸ் தீயில் எரிந்து கொண்டிருந்தது.

இதுபற்றி தகவலறிந்த செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் அந்த நிறுவனத்தின் உள்ளே சென்று புகைப்படம், விடியோ எடுக்க முற்பட்டனர். ஆனால், அனைவரையும் நுழைவாயில் முன் ஆலையின் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும், புகைப்படம் எடுத்தால் கேமராவை உடைத்து விடுவோம் எனத் தொழிலாளர்கள் மிரட்டினர். அப்போது அங்கு வந்த உரிமையாளர் பழனிசாமி, “அனைத்து தொழிலாளர்களும் படிக்காதவர்கள், அவர்கள் நினைத்தால் உங்களை (பத்திரிகையாளர்களை) என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவார்கள். அதனால் நீங்கள் இங்கு நிற்க வேண்டாம். ஓடிவிடுங்கள்’ என வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார்.

அவரது பேச்சைக் கேட்ட மற்ற ஊழியர்கள், ஆவேசமடைந்து, அங்கு நின்றிருந்த பத்திரிகையாளர்கள் ஆர். ராதாகிருஷ்ணன் (36), செபஸ்டியன் (30), சி. ஆனந்தகுமார் (30), எஸ். சங்கர் (30) ஆகியோரைத் தாக்கினர். மேலும், ஆனந்தகுமாரின் கேமராவை பிடுங்கிக் கொண்டு, கீழே தள்ளினர். தகாத வார்த்தைகளால் பேசிய தொழிலாளர்கள், “பத்திரிகையாளர்கள் இங்கிருந்து செல்லாவிட்டால் கை, காலை வெட்டிவிடுவோம்’ என மிரட்டினர்.

சாலையில் நின்றால்கூட அடிவிழும் எனத் தொடர்ந்து தள்ளியபடி இருந்தனர். மொத்தம் 8 பத்திரிகையாளர்களைச் சுமார் 200 பேர் சுற்றிவளைத்துக் கொண்டனர். பசுபதிபாளையம் உதவி ஆய்வாளர் கணேசன் மற்றும் ஒரு காவலர் அங்கு வந்ததும், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ஏ. சிவராமனிடம் பத்திரிகையாளர்கள் சி. ஆனந்தகுமார், ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக ராயல் கோச் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் மீது, பத்திரிகையாளர்களைக் கொல்ல முயன்றதாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் இரு பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, ராயல் கோச் நிறுவன மேற்பார்வையாளர் ஆர். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பத்திரிகையாளர்கள் எஸ். ஜெய்சங்கர், செபஸ்டியன், சி. ஆனந்தகுமார் உள்ளிட்ட 18 பத்திரிகையாளர்கள் மீது, 294 (பி) (தகாத வார்த்தைகளால் திட்டுவது), 341 (பணி செய்யவிடாமல் தடுப்பது), 447 (அத்துமீறி உள்ளே நுழைவது), 506 (கொலை மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்: செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் பிரிவுகளில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளதற்கு கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், சம்பவ இடத்தில் இல்லாத பத்திரிகையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்