தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கம்
தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீக்கம்
சென்னை, ஆக. 4: உச்ச நீதிமன்ற வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய தவறிய தமிழக அரசு வழக்கறிஞர்கள் வி.ஜி. பிரகாசம், டி. ஹரிஷ்குமார் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதம் தொடர்பாக தமிழக முதல்வர், மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக தலைமைச் செயலாளர், தமிழக காவல் துறை தலைவர் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரும், காவல் துறைத் தலைவரும் மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், முதல்வர் கருணாநிதியும், மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்காக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியதாகவும் தகவல் அறிந்து அது குறித்து விசாரித்தேன்.
தில்லியில் பணிபுரியும் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு குறித்து உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால்தான் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இந்த வழக்கு உரிய காலத்தில் எனது கவனத்துக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும் தெரிய வந்தது.
திமுக அரசு எப்போதும் நீதியின் மாட்சிமையை மதித்துவரும் பண்புடைய அரசாகும். உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசு வழக்கறிஞர்களான வி.ஜி. பிரகாசம், டி. ஹரிஷ்குமார் இருவரும் இந்த வழக்கு குறித்து எனது கவனத்துக்குக் கொண்டு வரவில்லை. உரிய காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.
உச்ச நீதிமன்றம் என் மீது கூறியுள்ள மிகக் கடுமையான விமர்சனத்துக்குப் பொறுப்பேற்று அந்த வழக்கறிஞர்கள் இருவரும் தங்களின் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளார்கள் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்