கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம் | சற்றுமுன்...




கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம்

கடிவாளம் இல்லா “கடன் அட்டை’ கலாசாரம்

சென்னை, ஆக 3 : கடன் அட்டை வியாபாரம் கடிவாளம் இல்லாத குதிரையைப் போல மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஒரு கோடி மக்கள் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதைப் பயன்படுத்தும் பத்து லட்சம் மக்களில் சென்னையில் மட்டும் ஏழு லட்சம் பேர் உள்ளனர். மாதத்திற்கு பத்து கோடி ரூபாய் தமிழ்நாட்டிலிருந்து கடன் அட்டை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் பெருநகரங்களில் வசிக்கும் மக்களே இதற்கு எளிதில் அடிமையாகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்னைகளை அறியாத நடுத்தர மக்களும் இதில் சிக்கித் தவிக்கின்றனர்.

எல்லா வங்கிகளும் கடன் அட்டைகளை எளிதில் வழங்குகின்றன. இதற்கென்று விளம்பரம், தொலைபேசியில் மூளைச் சலவை என பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மக்களை இவ்வட்டைகளை வாங்கச் செய்கின்றனர். இவ்வட்டைகளின் மூலம் எந்தப் பொருள்களையும் கடனில் வாங்கலாம். முழுப் பணத்தையும் உடனே வங்கிக்குச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாதா மாதம் குறைந்தபட்ச கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும் எனக்கூறி, விருப்பம் இல்லாதவர்களின் மீதும் இது திணிக்கப்படுகிறது.

இவ்வட்டைகளை பயன்படுத்துவோர் கட்ட வேண்டிய கடன் தொகையை 45 நாட்களுக்குள் கட்டி விட்டால் பிரச்னை ஏதும் இல்லை. பணம் கட்ட வேண்டிய நாளில் கட்டத் தவறினால் அதற்கென்று தனி வட்டி வசூலிக்கப்படுகிறது. வேறுசில பெயர்களிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக் கட்டணம் ஆயுள் காலத்திற்கும் இலவசம் என்று கூறி ஓராண்டு முடிந்ததும், நாம் கண்காணிக்காவிட்டால் கட்டணப் பிடித்தம் செய்கின்றனர். வட்டி விகிதம் அதிகரிப்பதன் மூலம் மாதா மாதம் செலுத்தும் குறைந்தபட்ச கட்டணத்தில் பெரும்பாலான கட்டணம் வட்டிக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் ஒரு மனிதனின் ஆயுள் காலம் முழுவதும் கடன் தொல்லையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் அட்டையை வாங்குகின்றனர். இவர்கள் தனி நபர் கடனையும் விட்டுவைப்பதில்லை. இப்படியாக இவர்களின் கடன் எல்லையை தாண்டுகிறது. கடன் அட்டைதாரர்களின் மாத சம்பளத்தையும் வங்கியிலிருந்து தவணை என்ற பெயரில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பணம் கட்டாதவர்களிடமிருந்து பணத்தை வசூலிப்பதற்காக நியமிக்கும் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி வீட்டிற்குள் சென்று அங்குள்ள பொருள்களைக் கொண்டு செல்வதும், தரக்குறைவாகப் பேசுவதும் எல்லை தாண்டுகிறது. இப்பிரச்னை காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் தலையீட்டால் குறைந்தாலும் மறைமுகமாக தொடர்கிறது என்பதே உண்மை.

இதனால் மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடன் அட்டைகளை பத்திரமாக பாதுகாப்பதும் அவசியமானது. ஏனென்றால் அதைத் தவறவிட்டால் வேறு யாரும் அதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

வங்கிகளின் “இதர வருமானம்’ ஆறாயிரம் கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் கடன் அட்டைகளின் பேரில் பல்வேறு விதமாக மக்களிடம் சுரண்டப்படுவதுதான் என்ற குற்றச் சாட்டும் எழுந்துள்ளது. கடன் அட்டை பயன்படுத்துவோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் சென்னை கடன் அட்டை பயன்படுத்துவோர் சங்கத்தின் செயலாளர் சபரி பெருமாள் கூறியதாவது:

கடன் அட்டைகளின் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். கடனை வசூலிக்கச் செல்லும் குழுக்களைத் தடை செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தில் உள்ளவர்களின் மீது வேறு மாநிலங்களில் வழக்கு தொடரக்கூடாது. கடன் அட்டை தொடர்பான வழக்குகளை சிவில் வழக்குகளாகப் பதிவு செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, இந்திய நிதி அமைச்சகம், இந்திய அரசு ஆகிவைகளிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றார். கடன் அட்டை வியாபாரத்தை முறைப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கடனட்டை விதிமுறைகளை வெளிப்படையாக தெரிவிக்க சட்டம் மற்றும் விதிமுறைகளை உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால்தான் கடன் அட்டை என்ற கடிவாளம் இல்லாத குதிரை, நுகர்வோர் பயணிக்கும் குதிரை வண்டிப் பயணமாக மாறும்.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்