ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாகாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாகாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு
புதுதில்லி, ஜூலை 29: தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கான தகுதிகள் ராமர் பாலத்துக்கு இல்லை. இதுவே மத்திய அரசு எடுத்துள்ள முடிவு என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் ஆஜராகி கூறியதாவது:
எமது தரப்பை பொருத்தமட்டில் அரசின் நிலை தெளிவானதாகும். தேசிய நினைவுச் சின்னம் என அறிவிப்பதற்கான தகுதிகள் எதுவும் ராமர் பாலத்துக்கு இல்லை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும்போது ராமர் பாலத்துக்கு சேதம் வராத வகையில் மாற்றுப் பாதையை கண்டறிவது தொடர்பாக அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
ஆனால் நாளைக்குள் இதுபற்றி அரசிடம் இருந்து தகவல் வரக்கூடும். சேது சமுத்திரத்தை நிறைவேற்ற ராமர் பால பாதையை தவிர்த்து வேறு பாதையை கண்டறிவது பற்றி சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இது பற்றி நான் உயர்நிலையில் உள்ளவர்களுடன் பேசியுள்ளேன். மாற்று பாதை தொடர்பாக அறிவியல்பூர்வமாக ஆராயப்படுகிறது என்றார் நாரிமன்.
ராமர் பாலத்தை அழித்தது ராமரேதான் என்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்த மத்திய அரசு, அதற்கு மறுநாளே சேது சமுத்திரத் திட்டத்தை புதிய பாதை வழியாக நிறைவேற்றுவது பற்றி அரசு தீவிரமாக ஆராய்வதாக ஜூலை 24ம் தேதி கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மேற்குக்கரையில் இருந்து கிழக்குக் கடற்கரைக்கு வரும் கப்பல்கள், கொழும்பு வழியாக இலங்கையைச் சுற்றிவருகின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பகுதி ஆழம் குறைவாக இருப்பதால் பெரிய கப்பல்கள் செல்லும் வகையில் இப்பகுதியை ஆழப்படுத்துவதே சேது சமுத்திரத்திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பெரிய கப்பல்கள் இலங்கையைச் சுற்றிவராமல் சேது கால்வாய் வழியாக வரமுடியும். இதனால் பயண நேரம் குறையும்.
சுமார் ரூ. 2000 கோடி செலவில் நிறைவேற்ற திட்டமிட்டு இது தொடங்கப்பட்டது. ஆனால் ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டதால் இத்திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்