ஓட்டல்களில் மலிவு விலை சாப்பாடு நிறுத்தம்
ஓட்டல்களில் மலிவு விலை சாப்பாடு நிறுத்தம்
சென்னை, ஜூலை 28: சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ரூ. 20-க்கு வழங்கப்பட்டு வந்த மலிவு விலை சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
போதுமான வரவேற்பைப் பெறாத நிலையில், மலிவு விலை சாப்பாடு திட்டத்தை நிறுத்தியுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
உணவுப் பண்டங்களின் விலையைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஓட்டல்களில் மலிவு விலை சாப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 - ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்தது.
சாதம் (250 கிராம்), பொரியல், கூட்டு (மறுமுறை கிடையாது), சாம்பார், ரசம் ஆகியன ரூ. 20-க்கு ஓட்டல்களில் வழங்கப்பட்டு வந்தன. அத்துடன், இட்லி, தோசை விலைகளையும் குறைத்து வழங்க ஓட்டல்களுக்கு அரசு அறிவுறுத்தியது.
அளவை அதிகரித்தும்… இந்தத் திட்டத்தை அமல்படுத்திய நேரத்தில், சாதத்தின் அளவு போதுமானதாக இல்லை என்று பரவலாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, 250 கிராம் என்பது 300 கிராமாக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், மலிவு விலை சாப்பாட்டுக்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. “”300 கிராம் சாதம், ஒருமுறை தான் பொரியல் என்ற நிபந்தனைகளுடன் ஓட்டலுக்கு யாரும் செல்வதில்லை. வயிறு நிறைவதற்காவே சாப்பிடச் செல்கிறோம்” என்றார் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மூர்த்தி.
திட்டம் நிறுத்தம்… ரூ. 20-க்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதால், பெரும்பாலான ஓட்டல்களில் வழக்கமாக வழங்கும் சாப்பாடு “சிறப்புச் சாப்பாடு’ என்று பெயர் மாற்றப்பட்டது. அந்தச் சாப்பாடு ஓட்டலின் தரத்தைப் பொருத்து, ரூ. 27 முதல் ரூ. 38 வரை விற்கப்பட்டு வருகிறது.
“”பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சிறப்புச் சாப்பாட்டை விரும்புவதால், மலிவு விலை சாப்பாட்டின் விற்பனையை நிறுத்தி விட்டோம். திட்டம் தொடங்கிய நாளில் ஓரிருவர் வாங்கிச் சாப்பிட்டனர். தற்போது யாரும் வாங்குவதில்லை” என்றார் பெரியமேட்டைச் சேர்ந்த ஓட்டல் நிர்வாகி.
இளைஞர்கள் காரணம்? ஓட்டலுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் தான். அவர்களின் வாங்கும் சக்தி தற்போது அதிகரித்துள்ள காரணத்தால், மலிவு விலை சாப்பாடு போன்ற விலை குறைவான சாப்பாடுகளுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை என்றும் காரணம் கூறப்படுகிறது.
“”ஓட்டலுக்கு வருபவர்களில் நடுத்தர மற்றும் வயது முதிர்ந்தவர்கள் குறைவாகவே வருகின்றனர். அதிகம் வருவது இளைஞர்கள் தான். தங்களுக்கு விருப்பமான சாப்பாடு வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால், நடுத்தர மற்றும் உயர்தர ஓட்டல்களில் மலிவு விலை சாப்பாட்டுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை” என்றார் ஓட்டல் சங்க நிர்வாகி ஒருவர்.
நடவடிக்கை எடுக்கப்படும்… இதற்கிடையே “மலிவு விலை சாப்பாட்டை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது’ என்று சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 60,000 பேர் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதுகுறித்து, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “”மலிவு விலை சாப்பாடு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு புகார்கள் ஏதும் வந்தால் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்