எனது புகழுக்குக் காரணமானவர்கள் யார்?: கருணாநிதி | சற்றுமுன்...




எனது புகழுக்குக் காரணமானவர்கள் யார்?: கருணாநிதி

எனது புகழுக்குக் காரணமானவர்கள் யார்?: கருணாநிதி

சென்னை, ஜூலை 26: பெரியார், அண்ணா, தமிழ்ச் சமுதாயம் இட்ட பிச்சை காரணமாகவே புகழ் மாலை சூட்டும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் தமிழ்நாடு அறிஞர் பேரவை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்க விழா மற்றும் “கலைஞர் படைப்புலகம்’ ஆய்வுக் கோவை நூல் வெளியீட்டு விழாவில் அவர் நிகழ்த்திய சிறப்புரை:-

“”தமிழ்நாடு அறிஞர் பேரவையின் அமைப்பாளர் ந. வேலுசாமி, 200-க்கும் மேற்பட்ட அறிஞர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று அதில் தேர்வு செய்த கட்டுரைகளைத் தொகுத்து 1,100 பக்கங்கள் கொண்ட “கலைஞர் படைப்புலகம்’ என்ற இந்த நூலை வெளியிட்டுள்ளார். இங்கு பேசிய அனைவரும் என்னுடைய வெற்றிக்குக் காரணம் உழைப்புதான் என்று குறிப்பிட்டனர்.

இப்படிப் புகழ்ந்தால் நான் மேலும் உழைப்பேன். அந்த உழைப்பு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எருவாகும் என்ற காரணத்தால்தான் என்னை பாராட்டியதாக நான் கருதுகிறேன். நீங்கள் எடுத்துரைத்த அவ்வளவு பெருமைகளும் சிறப்புகளும் எனக்கு உரியவை என்று நினைத்தால் இப்போதே நான் வீழ்ந்து விட்டேன் என்று பொருள்.

நான் ஒவ்வொரு அடி உயரமாகத் தெரிகிற போதும், அந்த உயரத்துக்கெல்லாம் காரணம் நான் அல்ல. என்னைத் தூக்கி உலகத்துக்குக் காண்பித்த பெரியாரும் அண்ணாவும்தான். அவர்களைவிட அதிகமாக எனக்கு ஊட்டிய அடக்க உணர்வும் மனிதப் பண்பாடும்தான் இவ்வளவு சிறப்புகளை எனக்குத் தந்திருக்கிறது.

கவிதை எழுதினேன்; கட்டுரை தீட்டினேன்; உரையாடல் எழுதினேன் என்றெல்லாம் நீங்கள் என்னைப் புகழ்ந்தாலும்கூட, இதில் எல்லாம் கிடைக்கும் மிகழ்ச்சியைக் காட்டிலும், ஏழை - பாட்டாளி மக்களின் பசி போக்கவும் அவர்களுடைய வாழ்க்கைச் சக்கரம் ஒழுங்காக உருளவும் இயன்றதைச் செய்வேன் என்பதுதான் நான் எழுதுகின்ற கட்டுரைகளில் எல்லாம் உயர்ந்த கட்டுரை” என்றார் முதல்வர் கருணாநிதி.

முன்னதாக “கலைஞர் படைப்புலகம்’ ஆய்வுக் கோவை நூலை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச. அகஸ்தியலிங்கம் பெற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர் ஆ. ராசா, கவிஞர் கயல்விழி உரையாற்றினர்.

 

பேத்திக்கு தாத்தா குட்டு - பாராட்டு

“கலைஞர் படைப்புலகம்’ ஆய்வுக் கோவை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் கயல்விழியின் பேச்சை முதல்வர் கருணாநிதி விமர்சித்து பாராட்டினார்.

“”கருத்துரை என்ற பெயரால் நான் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து இங்கு கவிஞர் கயல்விழி நீண்ட உரையாற்றினார். இந்தப் படிப்பை பள்ளிக்கூடத்திலே படித்திருந்தால் பல வகுப்புகளில் முன்னேறி வந்திருக்கலாம்.

தாத்தா (முதல்வர் கருணாநிதி) சொல்கிற வரையில் பேத்தி (கயல்விழி) பேச்சை நிறுத்த மாட்டாள் என்ற ஒரு நிலையை நீங்கள் எல்லாம் தெரிந்து கொண்டீர்கள்.

ஆனால், அழகான உரை. நான் எதிர்பார்க்காத உரை. இவ்வளவு பேசுவாரா? என நினைக்கும் அளவுக்கு ஒரு அற்புதமான உரையை நிகழ்த்திய கயல்விழிக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
 
 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்