லட்சியத்துடன் வாழ பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 10 உறுதிமொழிகள்
லட்சியத்துடன் வாழ பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 10 உறுதிமொழிகள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வெளியிட்டார்
பள்ளி மாணவ-மாணவிகள் லட்சியத்துடன் வாழ 10 உறுதிமொழிகளை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வெளியிட்டார்.
கலந்துரையாடல்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் உள்ள புனித பிரிட்டோ அகடமியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நேற்று பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அப்போது அப்துல்கலாம் பேசியதாவது:-
மகாத்மா காந்தியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். காந்திஜியின் 9-வது வயதில் அவரது தாய் அறிவுரை கூறினார். மகனே நீ வாழ்வில் துன்பத்தில் இருக்கும் யாருக்காவது உதவி செய்து முன்னேற்ற பாதைக்கு கொண்டு வரவேண்டும். இதன் மூலம் நீ மனிதனாக பிறந்த பலனை பெறுவாய் என கூறினார். இதை பூமியில் பிறந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும். (இதை நாம் கடைப்பிடிப்போமா என மாணவர்களை பார்த்து கேட்டார். உடனே மாணவ-மாணவிகள் கடைப்பிடிப்போம் என்றனர்). நாட்கள், நிமிடங்கள், பறவை போல் சுற்றி ஓடுகின்றன. இதை கருத்தில் கொண்டு நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லவேண்டும்.
10 உறுதி மொழிகள்
மாணவ சமுதாயமான நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் உங்கள் வாழ்வில் லட்சியத்துடன் வாழ 10 உறுதிமொழிகளை பின்பற்றி வாழவேண்டும். இதை என்னுடன் வாசித்து செயல்பட தயாரா?(மாணவர்கள் தயார் என கோஷம் போட்டனர்) அதன்பின் அப்துல்கலாம் 10 உறுதிமொழிகளை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
1. எனது வாழ்க்கையில் நல்ல லட்சியத்தை கொண்டு வாழ்வேன்.
2. ஒற்றுமையுடன் எனது லட்சியத்தை அடைவேன்.
3. எனது விடுமுறை நாட்களில் எழுத, படிக்க தெரியாத 5 பேருக்காவது படிக்க சொல்லி தருவேன்.
4. வீடு அல்லது பள்ளியில் குறைந்தபட்சம் 5 செடிகளை நட்டு, பாதுகாத்து, வளர்த்து வளமாக்குவேன்.
5. மது, சூதாட்டம் மற்றும் போதை பழக்கங்களுக்கு ஆளாகி இருக்கும் 5 பேரையாவது அதிலிருந்து மீட்டு நல்வழிப்படுத்துவேன்.
தாய் நாட்டை நேசிப்பேன்
6. துயரத்தில் உள்ள 5 பேரை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களின் துயரம் போக்குவேன்.
7. நான் வாழ்க்கையில் நேர்மையாக நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருப்பேன்.
8. தாய் மற்றும் தாய்நாட்டை நேசிப்பேன்.
9. பெண் குலத்துக்கு உரிய மரியாதை தந்து கண்ணியத்தை அளிப்பேன்.
10. நாட்டில் 5 அழியாத தீபத்தை ஏற்றி அதை அணையாமல் தீபச்சுடராக மாற்ற முயற்சிப்பேன்.
இந்த லட்சியத்தை நீங்கள் கடைபிடித்து வாழவேண்டும் என கூறினார். பின்னர் மாணவ-மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அப்துல்கலாம் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
அணு சக்தி ஒப்பந்தம்
கேள்வி:- அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு நல்லது என எந்த அடிப்படையில் கூறினீர்கள். எதிரிகள் தாக்குதல் நடத்தினால் எப்படி இருக்கும்?
பதில்:- அணுசக்தி ஒப்பந்தம் நாட்டுக்கு மிகவும் நல்லது. இதனால் நாட்டுக்கு தேவையான யுரேனியம் கிடைக்கும். தற்போது நம் நாட்டில் தோரியம் தயாரிக்கப்படுகிறது. இது அணுசக்தி பயன்பாட்டுக்கு வரும் வரை யுரேனியம் தேவைப்படுகிறது. எதிரி நாடுகள் நம் மீது தாக்குதல் நடத்தினால் நாம் மவுனமாக இருக்க மாட்டோம்.
கேள்வி:- இளைஞர்கள் அரசியலுக்கு வருவதற்கு உங்கள் யோசனை என்ன?
பதில்:- அரசியலில் 2 வகை உள்ளது. அரசியல் கொள்கை மற்றும் முன்னேற்ற அரசியல். இப்போது நம் நாட்டில் அரசியல் கொள்கை நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் எத்தனை பேர் அரசியலுக்கு வரஉள்ளீர்கள் என கேட்டார். (உடனே கூட்டத்தில் இருந்த மாணவ-மாணவிகள் நிறைய பேர் கையை உயர்த்தினார்கள்.) இத்தனை பேர் அரசியலுக்கு வந்தால் எதிர்காலத்தில் புதிய பாராளுமன்றம் உருவாக்கப்படும். அப்போது முன்னேற்ற அரசியல் நடக்கட்டும்.
கேள்வி:- 2020ல் இந்தியா எப்படி முன்னேற்ற பாதையில் இருக்கும்?
பதில்:- இந்தியாவில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வசதிகள் பெருகி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேவையான ஒன்று
பின்னர் அப்துல் கலாம் நிருபர்களிடம் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தம் நமது நாட்டிற்கு தேவையான ஒன்று. இது நாட்டிற்கு நன்மையை தரும் என கூறினார். பள்ளியை சேர்ந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. மாணவ-மாணவிகள் அப்துல்கலாமின் கைகளை பிடித்து குலுக்கினார்கள். ஆட்டோகிராப் கேட்டபோது ஆட்டோகிராப் கிடையாது என கூறி கை குலுக்கினார். நடிகர் விஜய்யின் தாய் ஷோபா தான் பாடிய பாடல்களின் சி.டி.கேசட்டுகளை வழங்கினார். இதில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்துல்கலாமின் வருகையை யொட்டி ஆதம்பாக்கத்தில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
குறிச்சொற்கள்: பள்ளி, மாணவர், மாணவி, லட்சியம், உறுதிமொழிஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்