சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச உரிமை உள்ளது - எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி | சற்றுமுன்...




சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச உரிமை உள்ளது - எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச உரிமை உள்ளது - எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி

சட்டசபையில் ஆங்கிலத்தில் பேச எங்களுக்கு உரிமை உள்ளது என்று கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கூறினார்கள்.

ஆங்கிலத்தில் பேச எதிர்ப்பு

கர்நாடக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் செய்யது யாசின் பேசினார். அப்போது அவர் ஆங்கிலத்தில் பேசினார். உடனே பல்வேறு உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னடத்தில் பேசும்படி கூறினார்கள். அதைத்தொடர்ந்து சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் உறுப்பினர்கள் கன்னடம் தெரிந்தால் கன்னடத்தில் பேச வேண்டும் என்றார்.

அப்போது மற்றொரு காங்கிரஸ் உறுப்பினரான கமருல் இஸ்லாம் எழுந்து பேசினார். அவர் கூறியதாவது:-

உரிமை உள்ளது

நாங்கள் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்து இருக்கிறோம். நாங்கள் கன்னடர்கள்தான். ஆனால் எங்கள் தாய் மொழி உருது. ஐதராபாத் மாகாணத்தில் இருந்து எங்களை கர்நாடகத்தில் சேர்த்தார்கள். எங்களுக்கு சரியாக கன்னடம் பேச வராததால் ஆங்கிலத்தில் பேசுகிறோம். இது எங்கள் தவறு அல்ல.

நாங்கள் உருது பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கன்னட ஆசிரியர்களை ஏற்பாடு செய்து தரவில்லை. இப்போதும் பல்வேறு உருது பள்ளிக்கூடங்களில் கன்னட ஆசிரியர்கள் இல்லை. உடனடியாக அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நாங்கள் ஆங்கிலத்தில் பேச உரிமை இருக்கிறது. எனவே, எங்களை ஆங்கிலத்தில் பேச அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு கமருல் இஸ்லாம் பேசினார்.

கட்டாயப்படுத்தவில்லை

அப்போது சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர் நான் உறுப்பினர்களை கன்னடத்தில்தான் பேச வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. உறுப்பினர்கள் கன்னடம் தெரிந்து இருக்கும்பட்சத்தில் அவர்கள் கன்னடத்தில் பேச வேண்டும் என்றுதான் கூறினேன்.

ஆங்கிலோ-இந்திய உறுப்பினர்

இதேபோல் ஆங்கிலோ-இந்திய உறுப்பினர் டெரிக் ஆங்கிலத்தில் பேசினார். இதற்கு சில எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கன்னடத்தில் பேசுமாறு கோஷமிட்டனர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டர், நியமன உறுப்பினர் டெரிக் கன்னடத்தில் பேச முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய டெரிக், எனக்கு கன்னட மொழி மீது அபார மரியாதை உள்ளது. எனது கருத்துக்களை ஆங்கிலத்தில் எடுத்து கூறினால் தெளிவாக பேச முடியும். இதனால் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆனால் சில உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பேச கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சபையில், ஆங்கிலத்தில் பேச எனக்கு உரிமை உள்ளது என்றார்.

முயற்சி

இதைத்தொடர்ந்து பேசிய மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே, நியமன உறுப்பினர் டெரிக், எங்களது நண்பர். அவருக்கு கன்னடம் தெரியும். என்னுடன் பேசும்போது அவர் கன்னடத்தில்தான் பேசுவார். சபையில் கன்னட பேச அவர் முயற்சிப்பார் என்றார்.

இத்துடன் விவாதம் முடிந்தது.

முன்னதாக டெரிக் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

மானியம் குறைந்துள்ளது

ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தை சேர்ந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கட்டணத்தில் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு அந்த மானியத்தை குறைத்து இருப்பதாக தெரிய வந்து உள்ளது. மேலும் குறைந்த அளவு மாணவர்களுக்கே இந்த பயன் சென்று அடைகிறது. இது பற்றி அரசு பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு டெரிக் எம்.எல்.ஏ. பேசினார்.

இதற்கு பதில் அளித்து கல்வி மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே கூறியதாவது:-

ஆங்கிலோ-இந்திய சமுதாய மாணவர்களுக்கு அளிக்கப்படும் மானியம் பள்ளிக்கூடங்களுக்கு ஏற்றவாறு வழங்கப்படுகிறது. மானிய குறைப்பு செய்யவில்லை. சராசரி தலா ஒரு மாணவருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த மானியத்தை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக எம்.எல்.ஏ. கூறி உள்ளார். இது தொடர்பாக ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் பயனை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி விசுவேஸ்வர ஹெக்டே கூறினார்.

 

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்