கவிழ்க்க அத்வானி டின்னர்-காப்பாற்ற சோனியா விருந்து! | சற்றுமுன்...




கவிழ்க்க அத்வானி டின்னர்-காப்பாற்ற சோனியா விருந்து!

கவிழ்க்க அத்வானி டின்னர்-காப்பாற்ற சோனியா விருந்து!

மத்திய அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பது தொடர்பாக வரும் 20ம் தேதி பாஜக கூட்டணிக் கட்சி எம்பிக்களுக்கு அத்வானி இரவு விருந்து அளிக்கிறார்.

நாடாளுமன்ற பாஜக துணைத்தலைவர் விகே.மல்கோத்ரா, செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

வரும் 22ம் தேதி நடக்கவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கூட்டணி அரசு நிச்சயமாகத் தோற்கும். இதைத் தவிர்க்க எம்பிக்களுக்கு விலை பேசி வருகின்றனர்.

எம்.பிக்களுக்கு பெரும் பணம் கொடுப்பதாகவும், அமைச்சர் பதவி அளிப்பதாகவும் காங்கிரஸ் கட்சி விலை பேசுகிறது. இதன்மூலம் அரசு எந்திரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகிறது.

இந்த குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சி என்ன செய்தாலும், மெஜாரிட்டிக்கு தேவையான எம்.பிக்கள் எண்ணிக்கை கிடைக்காது. இந்த அரசை காப்பாற்ற முடியாது என்று காங்கிரஸ் உணர வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் மத்திய அரசு தோற்பது உறுதி. 22ம் தேதியோடு இந்த அரசு போகக் போவது உறுதி.

காங்கிரஸ் அதிருப்தியாளர்கள், சுயேச்சை எம்பிக்களுடன் நாங்களும் பேசி வருகிறோம். அணு ஆயுத ஒப்பந்ததை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி எம்பிக்களையும் ஒருங்கிணைத்து நம்பிக்கை தீர்மானத்தை தோற்கடிப்போம்.

இந்தத் தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்து விவாதிக்க எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர் ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசை வீழ்த்த நாங்கள் எல்லா வேலைகளையும் செய்வோம்.

சாமானிய மக்களின் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் இப்போது தொழிலதிபர்களின் கட்சியாகிவிட்டது. இந்த அரசு எவ்வளவு சீக்கிரம் வீழ்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாட்டுக்கு நல்லது.

நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்குமாறு பாஜக கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் தங்கள் எம்பிக்களுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டன.

இந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து விவாதிக்க வரும் 20ம் தேதி இரவு பாஜக தலைவர் அத்வானி எங்கள் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் இரவு விருந்து வழங்கவுள்ளார்.

மேலும் பாஜக கூட்டணி முதல்வர்களின் கூட்டமும் வரும் 17ம் தேதி (நாளை) கூட்டப்பட்டுள்ளது என்றனர்.

எம்பியின் இடைநீக்கம் வாபஸ்:

இதற்கிடையே நம்பி்க்கை வாக்கெடுப்பில் காங்கிரஸை கவிழ்க்க, தனது அனைத்து எம்பிக்களையும் வாக்களிக்கச் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது.

குஜராத் எம்பியான வல்லபாய் கதிரியா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அக் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. இதன்மூலம் அவரும் வாக்களிக்க முடியும்.

ஆட்சியை காக்க சோனியா விருந்து:

இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் அனைவருக்கும் சோனியா காந்தியும் விருந்து கொடுக்கிறார்.

விருந்தில் எம்.பிக்களிடம் ஆதரவு கேட்டு சோனியாவும் மன்மோகன் சிங்கும் பேச உள்ளனர்.

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்