அணுசக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது: அதிபர் புஷ்
அணுசக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது: அதிபர் புஷ்
இந்திய -அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்தார்.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் ஜி-8 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் வந்துள்ள புஷ், வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.
ஜி-8 மாநாடு நடைபெறும் சப்போரா நகரிலிருந்து இரண்டு மணி நேர பயணத்துக்குப் பிறகு சுற்றுலாத் தலமான போரோமொய் மலைப் பகுதிக்கு வந்த புஷ், அங்குள்ள ஹோட்டல் விண்ட்சரில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இரு தலைவர்களும் அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசின் செயல்பாட்டுக்கு புஷ், அப்போது பாராட்டு தெரிவித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக இருவரும் சுமார் 50 நிமிடங்கள் பேசினர். அதன் பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர்.
“அமெரிக்காவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெகு சிறப்பாக அமைந்துள்ளது’ என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
“அணுசக்தி, பாதுகாப்பு, விண்வெளி, கல்வி பரிமாற்றம் என பல துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த முதல் சந்திப்புக்குப் பிறகு இரு நாடுகளின் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அரசின், இந்திய மக்களின் எண்ணத்தால் இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள உறவு இது. ஒருவரையொருவர் சார்ந்து வாழும் உலகில் நாம் வாழ்கிறோம். பருவநிலை மாற்றம், உலகப் பொருளாதாரம் என எந்த ஒரு பிரச்னையிலும் இரு நாடுகளும் இணைந்து தோளோடு தோள் கொடுத்து செயல்படும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக புஷ் பேசியதாவது:
இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேசினோம். பொறுப்புள்ள இவ்விரு நாடுகளுக்கும் இது முக்கியமானது.
பிரதமர் மன்மோகன் சிங்கை அளவுக்கதிகமாக மதிக்கிறேன். தனது நட்பு நாடுகளுடன் தொடர்ந்து பேசுவதை அமெரிக்கா வழக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் உறவு பலப்படுவதுடன், உலகப் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
இக்கூட்டம் இரு நண்பர்களிடையே நல்ல சந்திப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் தலைமையில் இந்தியா செயல்படுவதை வாழ்த்துகிறேன்.
சுற்றுச்சூழல், தடையற்ற வர்த்தகம் மற்றும் தோஹா பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து மன்மோகன் சிங்குடன் பேசினேன்.
இரு நாடுகளிடையே உள்ள உறவை இரு நாட்டு மக்களும் வெகுவாக வரவேற்கின்றனர். பிரதமரின் தலைமைப் பொறுப்பு, இரு நாடுகளிடையேயான பாரம்பரிய கலாசாரம் ஆகியவை பெருமை அளிக்கிறது என்று புஷ் அப்போது தெரிவித்தார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்