விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரவில்லை: ஐ.நா. பொதுச்செயலர்
விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் தரவில்லை: ஐ.நா. பொதுச்செயலர்
விவசாயத் துறைக்கு உலக அளவில் உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அதுவும் தற்போது உலக அளவில் காணப்படும் உணவுப்பொருள் தட்டுப்பாட்டுக்கான காரணங்களில் ஒன்று என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூலை 7-ம் தேதி ஜப்பானின் ஹொக்கைடோ நகரில் பணக்கார நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் இந்த கருத்தை பான் கி மூன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவுப்பொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அடுத்த 3 ஆண்டுகளில் வேளாண்துறை வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உலக நாடுகள் நிதி உதவியை மூன்று மடங்காக உயர்த்த வேண்டும்.
பசுமைப்புரட்சி அனைவருக்கும் நினைவிருக்கும். அதுதான் தென் கிழக்கு ஆசியாவையே மாற்றிக்காட்டியது. அதுபோன்ற பசுமைப் புரட்சி இப்போது தேவைப்படுகிறது.
இதுதவிர, ஏழைநாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தரமான விதை, உரம் கிடைக்க வழி செய்யவேண்டும். நியாயமான வர்த்தக நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமையும் தடைகளை அகற்ற வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தூய்மையான, அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய மின்சாரம் கிடைப்பதற்கு ஒரே நம்பிக்கை தரக்கூடியது மாற்று தொழில்நுட்பம்தான்.
இதை முன்னேறிவரும் நாடுகளுக்கு கிடைக்க ஆவன செய்வது அவசியம்.
சுற்றுச் சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தை கொடுத்து ஏழைநாடுகளின் பொருளாதாரம் வளர உதவவேண்டும்.
இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எப்போதும் இல்லாதது.
இந்த சவாலை எதிர்கொண்டு ஏழைகள், பட்டினியால் வாழ்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய நாம் உலக அளவில் ஒத்துழைத்து செயல்பட்டு நல்ல பலன் கிடைக்க வழி செய்யவேண்டும்.
புவி வெப்பமடைவதால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து உலகை பாதுகாக்கவும் நீடித்து நிலைக்கக் கூடிய எரிசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் உதவவேண்டும்.
உலக அளவில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரக்கூடிய அளவுக்கும் கோடிக்கணக்கானோர் வறுமையிலிருந்து மீளும் அளவுக்கும் பொருளாதார வளர்ச்சியை எட்டினாலும் எத்தனை நாள் இது நீடிக்கும் என்பதே பலரது கேள்வி.
உலகம் முழுவதிலுமே எரிபொருள், உணவுப்பொருள், காய்கறிகளின் விலை எட்டாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
மறுபக்கம் புவிவெப்பமடைதல், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் நமது பூமியின் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிட்டது.
இந்த பிரச்னை ஏழை, பணக்காரன், சிறிய நாடுகள், பெரிய நாடுகள் என இல்லாமல் அனைவரையுமே பாதிப்படையச் செய்கிறது.
புத்தாயிரம் மேம்பாட்டு லட்சியத்தில் நாம் எவ்வளவு பிடிப்புடன் இருக்கிறோம் என்பதை சோதிப்பதாக ஹொக்கைடோ உச்சி மாநாடு விளங்கும். 2015க்குள் வறுமையை உலகிலிருந்து ஒழிப்பது என்பது புத்தாயிரம் ஆண்டு மேம்பாட்டு லட்சியங்களில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் பான் கி மூன்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்