நெருக்கடியிலிருந்து மீண்டது மத்திய அரசு?
நெருக்கடியிலிருந்து மீண்டது மத்திய அரசு?
அணுசக்தி ஒப்பந்தத்தை சமாஜவாதி கட்சி ஆதரித்திருப்பதால், கவிழும் அபாயத்தில் இருந்து மத்திய அரசு தப்பிவிடும் எனத் தெரிகிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால், மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என இடதுசாரி கட்சிகள் மிரட்டி வருவதால், சமாஜவாதி கட்சியின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.
பிரதமர், சோனியாவுடன் முலாயம் சந்திப்பு: அரசை ஆதரிக்கப்போவதாக சமாஜவாதி வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அந்தக் கட்சித் தலைவர்களின் பேச்சுகள் அவர்களின் மனநிலையைத் தெளிவுபடுத்தியிருக்கின்றன.
பிரதமரை அவரது ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் சமாஜவாதி தலைவர்கள் முலாயமும் அமர்சிங்கும் வெள்ளிக்கிழமை சந்தித்து விவாதித்தனர். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினர். அணுசக்தி ஒப்பந்தம் தேச நலனுக்கு அவசியமானது என்று சமாஜவாதி தலைவர்களிடம் மன்மோகன் சிங் கூறியதாகத் தெரிகிறது.
ஒப்பந்தத்துக்கு ஆதரவு: சந்திப்புக்குப் பின் முலாயமும் அமர்சிங்கும் செய்தியாளர்களிடம் பேசினர்.
“இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்த விவரங்கள் மற்றும் செய்தித் தாள்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து வந்தோம். தற்போது போதுமான புதிய விவரங்கள் கிடைத்திருக்கின்றன.
ஒப்பந்தம் குறித்து பிரதமர் தெரிவித்த விவரங்கள் முழுத் திருப்தி அளித்தன. எனினும் அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக அவரிடம் எந்த உறுதியும் அளிக்கவில்லை’ என அவர்கள் தெரிவித்தனர்.
அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதால், தேசப் பாதுகாப்புடன் சமரசம் செய்துகொள்வதாக அர்த்தமில்லை என அப்துல் கலாம் தங்களிடம் தெரிவித்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அணுசக்தி ஒப்பந்தத்தையும் அரசையும் ஆதரிப்பதற்காக அமைச்சர் பதவி கோரி சோனியாவிடமோ பிரதமரிடமோ பேரம் எதையும் நடத்தவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பணவீக்கமும் பெட்ரோல் விலையும்: நாட்டில் பணவீக்கமும் பெட்ரோலியப் பொருள்களின் விலையும் அதிகரித்து வருவது தங்களுக்குக் கவலையளிப்பதாகத் தெரிவித்த சமாஜவாதி தலைவர்கள், பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு தடைவிதிக்காத அமைச்சர் முரளி தேவ்ராவை கடுமையாகச் சாடினர். தனியார் நிறுவனங்களுக்கான பெட்ரோலிய அமைச்சராக அவர் செயல்பட்டுவருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆதரவுக்கு நன்றி -காங்கிரஸ்: இதனிடையே, அரசுக்கு ஆதரவளிப்பதாக சமாஜவாதி தலைவர்கள் உறுதியளித்திருப்பதாகவும், அதற்கு காங்கிரஸ் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்