தேர்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு சோனியா கட்டளை | சற்றுமுன்...




தேர்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு சோனியா கட்டளை

தேர்தலுக்குத் தயாராகுங்கள்: கட்சியினருக்கு சோனியா கட்டளை

அடுத்த மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடந்தது. 5 மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், அடுத்த மக்களவைத் தேர்தலுக்கும் கட்சியைத் தயார்படுத்துமாறு அவர்களுக்கு சோனியா உத்தரவிட்டார்.

“தேர்தலுக்காகக் கட்சியைத் தயார்படுத்துவது பற்றி இன்று கூட்டம் நடந்தது. மக்களவைத் தேர்தல் பற்றியும் இதில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்துவதற்கான திட்டத்தை வகுத்து அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு அனைவருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி நிருபர்களிடம் கூறினார்.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 4 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளது. இறுதியாண்டில் எல்லா கட்சிகளுமே அடுத்தத் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும். அதற்கான திட்டத்தை காங்கிரஸ் வகுத்துள்ளது. வாக்காளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்றார் அவர்.

அனைத்து நிலைகளிலும் கட்சியை வலுப்படுத்த கால அவகாசம் கொடுத்துள்ளார் சோனியா காந்தி என்று காங்கிரஸ் செய்திப் பிரிவு தலைவர் வீரப்ப மொய்லி கூறினார்.

ஜூலை மாதம் முடிவதற்குள் கட்சியின் உயர் தலைவர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் என்று இன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர் என்றார் அவர்.

பழங்குடியினத்தவர்களின் நலனுக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய சட்டங்கள் பற்றி அந்த மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் கூட்டங்களை நடத்தி பிரசாரம் செய்யுமாறு மூத்த தலைவர்களுக்கு சோனியா காந்தி ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அவர்கள் இதுவரை நடத்திய பிரசாரக் கூட்டங்கள் பற்றி இன்று நடந்த கூட்டத்தில் சோனியா காந்தி பரிசீலனை செய்தார் என்றார் வீரப்ப மொய்லி.

இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி இக்கூட்டத்தில் பேசப்படவில்லை என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார். அதுபற்றி ஏற்கெனவே இருமுறை நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.
 
 

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்