பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் அத்வானி காந்திநகரில் போட்டி
பாஜக முதல் வேட்பாளர் பட்டியல் அத்வானி காந்திநகரில் போட்டி
புதுதில்லி, ஜூன் 26: பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கட்சி மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது.
கட்சியின் மூத்த தலைவரும் பிரதமர் வேட்பாளருமான எல்.கே. அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் 10 மாதங்கள் இருந்தாலும் அணு ஒப்பந்தப் பிரச்னையால் எந்த நேரமும் தேர்தல் வரலாம் என்று சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் தொண்டர்கள் உற்சாகமாக ஈடுபடுவதற்காக பாரதீய ஜனதா கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கு கட்சியைத் தயார் செய்யும் வகையில் பாஜக மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தேர்தல் பணிகளை முடுக்கிவிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், எல்.கே. அத்வானி, மூத்த தலைவர்கள் வெங்கைய்யா நாயுடு, சுஷ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு கட்சியின் தேர்தல் உத்திகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
இமாசலப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் மற்றும் கோவா மாநில நிர்வாகிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அணு ஒப்பந்தப் பிரச்னையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டால் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பாஜக எப்படிச் செயல்பட வேண்டும் என்றும் இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலுக்கான முதல் பட்டியலை உடனடியாக வெளியிட அப்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி கூட்டத்தின் முடிவில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குறிச்சொற்கள்: தேர்தல், பாஜக, போட்டி, அத்வானி
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்