சிகரெட் விலை உயர்வால் பீடிக்கு மவுசு | சற்றுமுன்...




சிகரெட் விலை உயர்வால் பீடிக்கு மவுசு

சிகரெட் விலை உயர்வால் பீடிக்கு மவுசு

சிகரெட் மீதான வரியை அரசு கடுமையாக உயர்த்தியதால், இதர புகையிலை பொருள்களான பீடி, குட்கா உள்ளிட்டவற்றின் உபயோகம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், மொத்த புகையிலை நுகர்வும் கடுமையாக உயர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் புகையிலை உபயோகப்போரில் 15 சதவீதம் மட்டுமே சிகரெட் பிடிப்பதாகவும், மற்ற 85 சதவீதத்தினர் பீடி உள்ளிட்ட இதர புகையிலை பொருள்களை நாடியுள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 10 கோடி பேர் பீடி புகைப்பதாகவும், புகையிலை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் இறப்பதாகவும், அதில் பீடி பிடிப்பதால் மட்டும் 6 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் விலையுடன் ஒப்பிடும் போது பீடி உள்ளிட்ட இதரப் புகையிலை பொருள்களின் விலை மிகக் குறைவாக இருப்பதாலேயே, இதனை அதிகம் பேர் நாடுவதாக இந்திய புகையிலை மைய இயக்குநர் உதயன் லால் தெரிவித்தார்.

இருப்பினும், அரசும் இதனை உணராமல் இல்லை. பீடித் தொழிலில் அதிக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாலும், எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்பைத் தருவதாலும், இதற்கான வரியை அதிகரிக்க அரசு ஆர்வம் காட்டுவதில்லை. சிகரெட்டுடன் ஒப்பிடுகையில் இதரப் புகையிலை பொருள்களின் விலை மிகவும் குறைவு என அவர் தெரிவித்தார்.

சிகரெட்டால் மட்டும் அரசுக்கு 85 சதவீத வருவாய் கிடைப்பதாக இந்திய புகையிலை மைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டில் 45 லட்சம் பேர் முழு நேர பீடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர்.

இருப்பினும், அவர்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே தினசரி கூலியாக கொடுக்கப்படுகிறது.

மேலும், தொடர்ந்து பீடி சுற்றுவதால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ரத்த சோகை, ஆஸ்துமா, காசநோய் உள்ளிட்டவை அதிகளவில் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீடி புகைப்போரின் எண்ணிக்கை வட இந்தியாவில் தான் அதிகம் என்றும், குறிப்பாக ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தான் பீடி பிரியர்கள் அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பீடி புகைப்பதால் ஏற்படும் உபாதைகளை விட, பீடி சுற்றுவதால் ஏற்படும் உடல் நலக்கேடுகளை அரசு கவனத்தில் கொண்டு, அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு உரிய சுகாதார வசதி அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

மேலும், மொத்த புகையிலை நுகர்வு கடுமையாக அதிகரித்துச் செல்வதை தடுக்க அரசு இனியும் காலந்தாழ்த்தாது நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

குறிச்சொற்கள்: , , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்