வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள் | சற்றுமுன்...




வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள்

வலுக்கும் கேபிள் யுத்தம்: தவிப்பில் மதுரை மக்கள்

சுமங்கலி கேபிள் விஷனுக்கும் (எஸ்சிவி), ராயல் கேபிள் விஷனுக்கும் (ஆர்சிவி) இடையே ஏற்பட்டுள்ள போட்டியால், பணம் செலுத்தியும் விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியவில்லை என்கிற அதிருப்தி மதுரை மக்களிடையே, அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் பரவி வருகிறது.
தற்போது மு.க. அழகிரியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.) சார்பில் வழங்கப்பட்டு வரும் சேனல்களில் சன் குழுமம் வழங்கும் சேனல்கள் இடம்பெறாதது, பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பரிதாப நிலையில் ஆபரேட்டர்கள்: ஆர்சிவி சார்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கேபிள் ஆபரேட்டர்களுக்கான கூட்டத்தில் மு.க. அழகிரியே பங்கேற்றார். இதனால், தற்போது எஸ்.சி.வி.யில் உள்ள 437 கேபிள் ஆபரேட்டர்களில் பலர் ஆர்சிவிக்கு ஆதரவான நிலையை எடுக்க நிர்ப்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.
பெண்கள் மத்தியில் அதிருப்தி: மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகப் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியையும், கோபத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது சுமங்கலி கேபிள் விஷனுக்கும், ராயல் கேபிள் விஷனுக்கும் இடையே நடக்கும் கேபிள் யுத்தம்.
சன் குழுமத்தின் கேபிள்கள் அனைத்தையும் இருட்டடிப்பு செய்து, மக்களைக் கலைஞர் தொலைக்காட்சியை மட்டும் பார்க்கச் செய்ய வேண்டும் என்கிற மு.க. அழகிரியின் முயற்சி, திமுக அரசுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
“”இந்த எதிர்ப்பெல்லாம் மூன்று நான்கு நாட்களில் அடங்கிவிடும். சன் டி.வி. தெரியவில்லை என்பதால் யாரும் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிடப் போவதில்லை. வேறு வழியில்லாமல் அனைவரும் கலைஞர் தொலைக்காட்சிக்கு மாறிவிடுவார்கள்” என்கிற மு.க. அழகிரி சார்பு வாதத்தை கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவரும் சீரியல்களை ஒளிபரப்பாமல் இருந்தால், அந்த வாடிக்கையாளர்கள் சன் குழுமத்தின் டிடிஎச் சேவைக்கு மாறிவிடுவார்கள் என்று பயப்படுகிறார்கள் அந்த ஆபரேட்டர்கள்.
“”வாடிக்கையாளர்கள் எங்களிடம் தாங்கள் தந்த முன் பணத்தைத் திருப்பித் தரும்படி எங்கள் அலுவலகத்தை முற்றுகை இடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சன் குழுமம் அவர்களுக்கு டிடிஎச் சேவை அளித்துவிடும். அப்போது ராயல் கேபிள் விஷன்காரர்கள் என்ன செய்வார்கள்? தேவையில்லாமல் மு.க. அழகிரி இந்த விஷயத்தில் தலையிட்டு, எங்கள் வயிற்றில் அடிக்கப் போகிறார், அதுதான் நடக்கப் போகிறது” என்று புலம்பித் தீர்த்துவிட்டார் ஒரு கேபிள் டி.வி. ஆபரேட்டர்.
டிஷ் ஆன்டனாவுக்கு மாறும் மக்கள்: சன் டிவி, கே டிவி, சன் நியூஸ் உள்ளிட்ட சன் நெட்வொர்க்கில் 20 சேனல்களும், சோனி பேக்கேஜின் 6 சேனல்களின் தென் மாநில விநியோக உரிமையையும் எஸ்சிவி எடுத்துள்ளது. தற்போது மு.க. அழகிரியால் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்சிவி மூலம் சன் நெட்வொர்க் சேனல்கள், சோனி பேக்கேஜ் சேனல்கள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் தற்போதைய அதிருப்திக்குக் காரணம்.
கேபிள் மூலம் சன் டிவி உள்ளிட்டவற்றைப் பார்க்க முடியாததால் டிஷ் ஆன்டனா இணைப்பை பலர் பெற்று வருகின்றனர். கடந்த 2 தினங்களில் மட்டும் மதுரையில் டிஷ் ஆன்டனா விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

பொதுமக்கள் கருத்து
வழக்கறிஞர் முத்துக்குமார்
பொதுமக்கள் பகடைக் காய்களாக ஆக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிப்பட்ட நபர் விரும்பிய சேனலைப் பார்க்க முடியவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

 

குடும்பத் தலைவி ஞானேஸ்வரி
சன் நெட்வொர்க் சேனல்களை வழங்குவதாகக் கூறித்தான் கேபிள் ஆபரேட்டர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். அப்படியிருக்கும்போது அந்த சேனல்கள் கிடைக்கவில்லை என்றால் கேபிள் ஆபரேட்டர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

 

ஜவுளி வியாபாரி பிரகாசம்
இத்தனை சேனல்கள் காண்பிக்கப்படும் என்ற ஒப்பந்தப்படிதான் கேபிள் ஆபரேட்டர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். விரும்பிய சேனல்களைப் பார்க்க முடியாவிட்டால் அடுத்தமாதம் கட்டணம் செலுத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.

 

கல்லூரி மாணவி ரூபிணி
தொழில் போட்டி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பாதிக்காதவகையில் மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவரவருக்குப் பிடித்ததைப் பார்க்க முடியவில்லை என்றால் அது என்ன ஜனநாயகம்? கட்டணம் பெற்றுக்கொண்டு சேனல்கள் ஒளிபரப்பப்படுவதில் பிரச்னை ஏற்பட்டால் ஆபரேட்டர்கள் தான் அதற்கு முழுப்பொறுப்பு.

 

சாலையோரக் கடை வியாபாரி பழனி
கடந்த 2 தினங்களாக சன் டிவியில் சேனல்கள் தெளிவாகவே ஒளிபரப்பு செய்யப்படவில்லை. யார் கேபிள் இணைப்பு கொடுத்தாலும் இந்த சேனல்கள் தெரியும்விதமாக இருக்க வேண்டும்.

 

பள்ளி ஊழியர் லட்சுமி
சன் டிவியில் சீரியல்களை விரும்பிப் பார்க்கிறோம். அதைப் பார்க்காவிட்டால் கேபிள் இணைப்பே தேவையில்லை என்றே தோன்றுகிறது. சன் டிவி இணைப்புத் தராவிட்டால் பணம் தரமாட்டோம் என கூறியுள்ளோம்.

 

குறிச்சொற்கள்: , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்