அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள் | சற்றுமுன்...




அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள்

அழகிரி-ஸ்டாலின் பூசல் அதிகரிப்பு: நெருங்கி வரும் மாறன் சகோதரர்கள்     

 

Dayanithi and Stalin

சென்னை: முதல்வர் கருணாநிதி தனது 85வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது புதல்வர்களான மு.க.அழகிரிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான இடைவெளி பலமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பேரன்களான மாறன் சகோதரர்கள் கருணாநிதி, ஸ்டாலினுடன் வேகமாக நெருங்க ஆரம்பித்துள்ளனராம்.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவரான கலைஞர் கருணாநிதி இன்று தனது 85வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். சில நாட்களுக்கு முன்பு தனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் தேவையில்லை என்று கூறியிருந்தார் கருணாநிதி.

இதனால் திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், தொண்டர்களை சந்திப்பதே எனக்குப் புத்துணர்ச்சி என்று கூறுபவர் கருணாநிதி. அப்படிப்பட்டவரே பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று கூறியதால் திமுகவினர் பெரும் குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

ஆனால் முதல்வர் பிறந்தநாளே தேவையில்லை என்று கூறியதற்கு அவரது புதல்வர்கள் அழகிரி, ஸ்டாலினுக்கு இடையே மீண்டும் தலை தூக்கியுள்ள விரிசலே காரணம் எனக் கூறப்படுகிறது.

ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியும், அழகிரிக்கு கட்சியில் துணைத் தலைவர் அல்லது துணை செயலாளர் பதவியும் தரப்பட வேண்டும்  என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அழகிரிக்கு முக்கியப் பொறுப்பு கொடுப்பதை ஸ்டாலினும், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் விரும்பவில்லையாம்.

இதுகுறித்து முதல்வரிடம் அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர். ஆனால் மறுபக்கம் அழகிரி தரப்பிலிருந்து பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பு பதவி கொடுத்தே ஆக வேண்டும் என்று நெருக்கடி தரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட பூசலால்தான் ஸ்டாலின் கோபித்துக் கொண்டு பெங்களூரில் உள்ள தனது சகோதரி செல்வி வீட்டுக்குப் போய் விட்டார் என்று தெரிகிறது.

இங்கு இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்துள்ளதை சொல்லியாக வேண்டும். மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதலுக்குப் பிறகு மாறன் சகோதரர்களுக்கும், கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு விட்டது. அது இப்போது படுவேகமாக அடைபட்டு வருகிறதாம்.

குறிப்பாக ஸ்டாலினுக்கும், மாறன் குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் பழைய நட்பு துளிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய பங்காற்றியது ஸ்டாலினின் மகன் உதயநிதி என்கிறார்கள். தந்தைக்கும்-மாறன் சகோதரர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் அதிக அக்கறை காட்டினார் என்கிறார்கள்.

அதேபோல கருணாநிதிக்கும் கூட மாறன் சகோதரர்கள் மீது முன்பு போல தீவிர வருத்தம் இல்லையாம்.

வரும் லோக்சபா தேர்தலில் திமுக வெற்றி பெற சன் டிவியின் ஒத்துழைப்பும், உதவியும் மிக முக்கியம் என ஸ்டாலின் நினைக்கிறாராம்.

இந்த மாற்றங்களுக்கு உதயநிதியை விட மிக முக்கிய காரணமாக விளங்கியவர் கருணாநிதியின் புதல்வி செல்வி.

இந்த நிகழ்வுகள், காரணமாக தற்போது அழகிரி கிட்டத்தட்ட தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக ஸ்டாலின் மற்றும் மாறன் சகோதரர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் இதுகுறித்து அழகிரி சற்றும் கவலைப்படவில்லை. காரணம் அவரது பலம் வேறு, களம் வேறு. தனக்குப் பதவி வேண்டும் என்பதில், அழகிரி மிகத் தீவிரமாக உள்ளாராம்.

அவரை ஒரேயடியாக புறக்கணித்து விட முடியாது. அதேசமயம், ஸ்டாலின் கோரிக்கையையும் புறக்கணித்து விட முடியாது என்பதால் முதல்வர் கருணாநிதி இந்த மோதலுக்கு மத்தியில் என்ன முடிவு எடுப்பது என்பதில் சற்றே தடுமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்தான் பொதுக்குழுவில் அழகிரிக்குப் பதவி கொடுப்பது குறித்தோ, ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்தோ முடிவெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இடையில் காணாமல் போயிருந்த அழகிரி, ஸ்டாலின் பூசல் மீண்டும் புதிய வடிவில் வெடித்திருப்பதை திமுகவினர் கவலையுடன் கவனித்து வருகின்றனர். அதேசமயம், மாறன் சகோதரர்கள் மீண்டும் கருணாநிதி குடும்பத்துடன் நெருங்கி வருவது அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

குறிச்சொற்கள்: , , , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்