மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு
மனித நேயமுடன் வாழ துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு விழாவில் கி. வீரமணி பேச்சு
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் எழாவது ஆண்டு துவக்க விழா, பவளவிழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழா மற்றும் அமீரகத்தில் சமூக சேவையில் விருதுபெற்றவர்களை கௌரவப்படுத்தும் விழா துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் 28.02.2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி தலைமை தாங்கினார். புரவலர் எல். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பவளவிழா கண்ட திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தனது விழாப்பேருரையில் மனிதநேயமுடன் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்தார். தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை எழுதிய கட்டுரையால் நெகிழ்ந்த பெரியார் அவர்கள் பாராட்டுவதற்காக தனது வயதினையும், உடல் முதிர்ச்சியையும் பொருட்படுத்தாது சென்றார். எனவே எவரையும் பாராட்ட வேண்டும் என எண்ணினால் உடன் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களது சுயமரியாதைக் கொள்கையில் எள்முனையளவும் பிசகாது வெற்றி நடைபோடுவோம் என்றார்.
வளைகுடாவின் சிறந்த ஆசிய தொழிலதிபர் விருதுபெற்ற தமிழர் ETA அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன் தனது வாழ்த்துரையில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் எளிமையைக் கண்டு மிகவும் நெகிழ்வதாகக் குறிப்பிட்டார். பெரியார் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் வாழும் பெரியாராக சத்யராஜ் காட்சி தருவதாகக் குறிப்பிட்டார்.
திரைப்பட நடிகர் சத்யராஜ் தனது உரையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குச் செல்வோர் அங்கேயே தங்கி விடுகின்றனர். வளைகுடாவில் வாழ்ந்து வருவோரே தாயகத்திற்கு பல்வேறு பணிகளைச் செய்து வருவதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார். அமீரக தமிழ் தொழிலதிபர் சையது எம். ஸலாஹுத்தின் அவர்களை தமிழர் திலகம் என அழைப்பது பொருத்தமாகும் என்றார்.
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா மலரை கி. வீரமணி வெளியிட முதல் பிரதியை தொழிலதிபர் சையது எம். ஸலாஹுத்தீன் பெற்றுக்கொண்டார்.
விழாவில் அன்பு மருத்துவமனை குடந்தை அன்பழகன், அஜ்மான் மூர்த்தி, எல். கோவிந்தராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்