சுஜாதா மறைவிற்கு கலைஞர் இரங்கல்; கமல்,ரஜினி அஞ்சலி
எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புகழ் பெற்ற எழுத்தாளர் சுஜாதா இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைகிறேன். ரங்கராஜன் எனும் இயற்பெயர் கொண்ட அவர் தமது துணைவியார் பெயரையே சுஜாதா எனப் புனைப் பெயராகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களையும், இரு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், பல நாடகங்களையும், அறிவியல் சார்ந்த பல ஆய்வு கட்டுகரைகளையும் எழுதிக் குவித்து தமிழ்மொழிக்கு அருந்தொண்டு புரிந்துள்ளார்.
இவரது நாவல்களில் சில திரைப்படங்களாகவும், உருவாகி உள்ளன. புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றிய சிறப்பினையும் பெற்ற இவர், கணினி அறிவாற்றல் மூலம் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளவர்.
பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் பொது மேலாளராக பணியாற்றியபோது இவரது தலைமையிலான குழுவே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உருவாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய பன்முகத் திறன்கள் வாய்ந்த சுஜாதாவுக்கு 2000ம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்த நிகழ்வை நினைவு கூர்கிறேன். பெருமைக்குரிய திருமகன் சுஜாதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இவரது பிரிவால் வாடும் இவரது குடும்பத்தார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுஜாதாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இப்போது அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுஜாதாவின் உடல் நாளை காலை 8.30 மணிக்கு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
பிற்பகல் 1 மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பின்னர் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்படவுள்ளது.
குறிச்சொற்கள்: சுஜாதா, ரஜினிகாந்த், இரங்கல், கமலஹாசன், கலைஞர், Condolences, Writer Sujathaaஇந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்
Print This Post
Ping: தமிழ்மணம், தேன்கூடு
இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்