ரஜினி: ‘அரவாணி மாதிரி வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தேன்’ | சற்றுமுன்...




ரஜினி: ‘அரவாணி மாதிரி வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தேன்’

‘சேது சமுத்திர திட்டம் தொடர்பாக உணர்ச்சிப்பூர்வமான விஷயம் எழுந்துள்ளது. அதன் தீவிரம் தமிழகத்தில் தெரியாது. வட இந்தியாவில் அது புகைந்து கொண்டிருக்கிறது. அந்த புகையை ஊதி நெருப்பாக்கி, தீயாக்க சில விஷயங்கள் நடக்கின்றன’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

தமிழக அரசு திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினி பேசியதாவது:

இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மதியம் 12 மணிக்கு வெள்ளைத்தாடி, மீசையுடன் இருந்தேன். எனது மகள்கள், ஷவெள்ளைத்தாடியை எடுத்துவிட்டு, மீசைக்கு டை அடித்து விட்டு வந்தால் தான் நிகழ்ச்சி வருவோம்ஷ என்று கூறினர். என்னை வெள்ளைத்தாடி, மீசையுடன் பார்த்தால், வீட்டில் ஏதோ பிரச்னை இருக்கிறது என நினைப்பார்கள் என்று மகள்கள் கூறியதால், தாடியை எடுத்து மீசைக்கு டை அடித்து வந்தேன்.

திரையுலகத்தில் பணம், பெயர் சம்பாதித்தாலும், நல்ல படம் எடுத்து, அந்த படங்கள் நன்றாக ஓடினால் தான் மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல படங்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும் இந்த விழாவில் எனக்கும் விருது கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தில் வந்திருக்கிறேன்.

சந்திரமுகி படத்தில் நன்றாக நடித்தது ஜோதிகாவும், வடிவேலும் தானே. இவருக்கு எதற்கு விருது வழங்குகிறார்கள் என சிலர் நினைப்பார்கள். சந்திரமுகி படத்தில் சரவணனாக நடித்ததற்கு இந்த விருது வழங்கப்படவில்லை. வேட்டையனாக நடித்ததற்காகத் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பை பற்றி சிந்தித்து, மூன்று நிமிட காட்சிக்காக 15, 20 நாள் ஹோம்ஒர்க் பண்ணி நடித்த படம் சந்திரமுகி.

படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது, அவுரங்கசீப் வரலாறு பற்றிய புத்தகம் கிடைத்தது. அவுரங்கசீப்பின் மிகச்சிறந்த வீரர்கள் அரவாணிகள். அரவாணி மாதிரி வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தேன்.

பருத்திவீரன் கார்த்தி, பிரியாமணி ஆகியோரை மிகவும் பாராட்டுகிறேன். கார்த்தி 200 படங்களில் நடித்த அனுபவத்துடன் முதல்படத்திலேயே நடித்திருக்கிறார். கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்பை தவறவிட்டால், வாய்ப்பை நாம் தேடிப் போக வேண்டும் அல்லது வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

பெரியார் படத்தை பற்றி சில விஷயங்களை கூறியதற்கு பல தரப்பிலிருந்து போன் கால்கள், கடிதங்கள் வந்தன. நான் பெரியார் படத்தை பாராட்டியது தவறு என கூறினர். பெரியார் ஒரு விருந்து. விருந்தில் பத்து வகையான பண்டங்களை படைப்பார்கள். ஒருவருக்கு பிடித்த பண்டங்களை சாப்பிடலாம். கடவுள் எதிர்ப்பு, தீண்டாமை, ஜாதி ஒழிப்பு என பல விஷயங்களை கூறினார். கடவுள் எதிர்ப்பு எனக்கு பிடிக்கவில்லை. அதை எடுத்து வைத்து விட்டு மற்றவற்றை எடுத்துக் கொண்டேன்.

நாட்டின் குடிமகனாக ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். சேது சமுத்திர திட்டம் தொடர்பாக உணர்ச்சிப்பூர்வமான விஷயம் எழுந்துள்ளது. அதன் தீவிரம் தமிழகத்தில் தெரியாது. வட இந்தியாவில் அது புகைந்து கொண்டிருக்கிறது. அந்த புகையை ஊதி நெருப்பாக்கி, தீயாக்க சில விஷயங்கள் நடக்கின்றன. தென்னிந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி. வட இந்தியாவில் உள்ள எல்லா தலைவர்களும் கருணாநிதிக்கு நண்பர்கள். நீங்கள் பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு கண்டால் மிகவும் சந்தோஷப்படுவேன்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

விழாவில் நடிகர் கமல் பேசுகையில், ‘தமிழகத்தை மட்டுமல்ல, திரையுலகத்தையும் மேம்படுத்தும் முயற்சியை முதல்வர் கருணாநிதி என்றென்றும் செய்து கொண்டிருக்கிறார். மாலை, பொன்னாடைக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிட்டதற்காக என்றென்றும் நன்றியுள்ள தமிழனாக இருப்பேன். சென்னை சிங்கார சென்னையாக இதுவும் வழிவகுக்கும். மாலைகள் எல்லாம் எங்கே போகின்றன என்பது நமக்கு தெரியும். இது ஒரு சுகாதார செயலும் கூட’ என்றார்.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்றார். முன்னதாக இசையமைப்பாளர்கள் ஹாரீஸ் ஜெயராஜ், யுவன்சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி, நடிகர்கள் வடிவேலு, விவேக் காமெடி நிகழ்ச்சி, நடிகர் வினித், நடிகைகள் நமீதா, நிலா, லட்சுமிராய் ஆகியோரது நடன நிகழ்ச்சிகள் நடந்தன. அனு ஹாசன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

நன்றி: தினமலர்

குறிச்சொற்கள்: , ,

இந்தக் குறிச்சொற்களுடன் ஒத்திருக்கும் இடுகைகள்

Print This Post Print This Post Ping: தமிழ்மணம், தேன்கூடு


இந்த செய்தி குறித்த பிறரின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிய RSS 2.0 ஒடையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இச்செய்தி குறித்த உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அல்லது, இது குறித்து உங்கள் தளத்தில் எழுதலாம்.



ஒரு மறுமொழி to “ரஜினி: ‘அரவாணி மாதிரி வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்தேன்’”

  1. […] வெளிவராது“: தங்கர்பச்சான் ரஜினி: “அரவாணி மாதிரி வேட்டையன் கதாபாத்திரத…“ “பெரியார் படத்தில் […]

உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்